CAA : வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்!

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரயில்நிலையம் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றபோது, தடுப்புகளை வைத்து போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல, நெல்லை ரயில் நிலையத்தையும் முற்றுகையிட்ட மாணவ அமைப்பினர், ரயில்நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மதுரை பெரியார் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்திலேயே பேரணியாக சென்ற மாணவர்கள், வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால், பல்கலைக்கழகத்திற்கு குடியரசுத்தலைவர் வருகை தரும்போது எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே