ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் பும்ரா இடம் பெறவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி மற்றும் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் தற்போது விளையாட முடியாமல் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் 16-ம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பது ரசிகர்களுக்கு இடையே சந்தேகத்தை எழுப்பியது.
முதலில், காயம் குணமடைந்ததும் அவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடருக்கு திரும்புவார் என கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் தெரிவித்து இருந்தனர். இதனால் பும்ரா இந்திய அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக வருகிற 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட உள்ள 8-வது டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்குழு மற்றும் விளையாட்டு நிபுணர்களுடன் கலந்து யோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலககோப்பை தொடரில் பும்ராவுக்கு பதில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பும்ரா உலககோப்பை தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என எதிர்ப்பார்த்து இருந்த ரசிகர்கள் அவர் போட்டியில் விளையாட போவதில்லை என தெரியவந்ததும் சற்று மனமுடைந்து உள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.