கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை பல ஜாம்பவான்களும் முயற்சி செய்து முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதை சாதித்துக் காட்டி உள்ளார்.
நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: மணிரத்னம்
தமிழர்களின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி நடப்பதற்கே முக்கியமான காரணமாக அமைந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே பொன்னியின் செல்வன் கதை உருவானது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
பொன்னியின் செல்வன் கதை
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு நிச்சயம் முழு கதையும் தெரிந்திருக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம். முதலிலேயே ஆதித்த கரிகாலன் (சியான் விக்ரம்), பார்த்திபேந்திர பல்லவன் (விக்ரம் பிரபு) உடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட போரில் எதிரி நாடுகளை கைப்பற்றுகிறார்.
வந்தியத்தேவன் என்ட்ரி
அந்த போரில் கடைசியாக ஆதித்த கரிகாலனுக்கு கை கொடுக்கும் விதமாக வந்தியத்தேவன் (கார்த்தி) அசத்தல் என்ட்ரி கொடுக்கிறார். போர் முடிந்ததும் ஆதித்த கரிகாலனின் 2 முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சை புறப்படுகிறார் வந்தியத்தேவன். பொன்னி நதி பாடல் முடிந்ததும் ஆழ்வார்க்கடியன் நம்பி (ஜெயராம்) வைணவம் தான் பெரியது என சைவ முனிவர்களுடன் சண்டை போடுவதை பார்த்த வந்தியத்தேவன் உள்ளே புகுந்து அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்கிற வசனத்தை பேசி அந்த பஞ்சாயத்தை முடித்து வைக்கிறார்.
பெரிய பழுவேட்டரையர் சதி திட்டம்
குறுநில மன்னரான பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) சோழ தேசத்து தன அதிகாரியாக உள்ளார். வயதான காலத்தில் இளம் பெண் நந்தினியை திருமணம் செய்து கொண்டு போகும் இடங்களுக்கெல்லாம் பல்லக்கில் அவரையும் கொண்டு போகிறார் என்கிற அவச்சொல் வருகிறது. ஆனால், கடம்பூர் மாளிகையில் குறவைக் கூத்துடன் பெரிய சதித்திட்டமே போடுகிறார் பெரிய பழுவேட்டரையர். இதனை வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்க்கடியன் நம்பி மறைந்திருந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
ஆதித்த கரிகாலனை கொல்ல
சுந்தர சோழருக்கு பிறகு பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் தான் அரியணை ஏற நேரிடும். ஆனால், அந்த அரியணைக்கு சொந்தக்காரன் நான் தான் என சுந்தர சோழரின் சகோதரர் மதுராந்தகன் (ரகுமான்) கூற அவருக்காக ஆதித்த கரிகாலனை கொல்லத் தான் அந்த ஆலோசனை கூட்டத்தில் சதி செய்யப்படுகிறது.
பழிவாங்கத் துடிக்கும் நந்தினி
பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு சோழ தேசத்துக்கு நந்தினி (ஐஸ்வர்யா ராய்) வருவதே அவரது கணவன் வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்லத் தான். பாண்டிய தேசத்தின் ஆபத்துதவிகளான ரவிதாசன், சோமன் சாம்பவன் உள்ளிட்டோர் மறைமுகமாக நந்தினிக்கு உதவி செய்கின்றனர். ஆதித்த கரிகாலனையும் அருண்மொழி வர்மனையும் கொல்ல பல சதித்திட்டங்களை போட்டு வருகிறார் நந்தினி. மேலும், நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் இடையே பால்ய காதல் ஒன்றும் காட்டப்படுகிறது.
குந்தவையின் போராட்டம்
ஆதித்த கரிகாலனையும், அருண்மொழி வர்மனையும் சோழ தேசத்துக்கு வரவழைத்து நந்தினியின் சதித் திட்டத்தையும் இங்கே நிலவும் பிரச்சனையையும் சரி செய்ய வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார் குந்தவை (த்ரிஷா). ஆதித்த கரிகாலனை அழைத்து வர அவரே காஞ்சிக்கு செல்கிறார்.
இலங்கையில் அருண்மொழி வர்மன்
அருண்மொழி வர்மன் என்றே தெரியாமல் அவருடன் சண்டை போடும் வந்தியத்தேவன் அதன் பின்னர் புரிந்து கொள்கிறார். ரவிதாசன் (கிஷோர்) ஆட்கள் அருண்மொழியை கொல்ல முயற்சிக்க மந்தாகினி (வயதான ஐஸ்வர்யா ராய்) அருண்மொழியை காப்பாற்றுகிறார். சீனத் துறவிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அருண்மொழி அப்பாவின் கைது கட்டளையை ஏற்று சோழ தேசத்துக்கு வந்தாரா? நந்தினி ஆதித்த கரிகாலனை கொல்ல போட்டம் திட்டம் என்ன ஆனது என்பதுடன் முதல் பாகம் முடிகிறது.
பலம்
இயக்குநர் மணிரத்னம் முதல் ஃபிரேமில் இருந்து நேரடியாக கதைக்கு சென்று விடுவதும் பொன்னியின் செல்வன் வரலாற்றை ரசிகர்களுக்கு தெளிவாகவும் விரைவாகவும் சொல்ல முற்பட்டு இருப்பது பெரிய பலம். ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் போட்டுள்ள உழைப்பு பெரிய விஷயம். சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என அனைவரது நடிப்பும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்துகிறது. தோட்டாதரணியின் பிரம்மாண்ட செட்கள், ரியல் அரண்மனைகளில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு, ரவிவர்மனின் ஒளிப்பதிவு நம்மை 9ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கிறது. வந்தியத்தேவன் நகைச்சுவையாக பேசும் வசனங்களுக்கு ஜெயமோகன் நல்லாவே உயிர் கொடுத்திருக்கிறார்.
பலவீனம்
முதல் காட்சியிலேயே சியான் விக்ரமை காட்டும் போது வரும் போர் காட்சிகளில் CGI சொதப்பல்கள் நிறையவே உள்ளன. 5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து அங்கொரு காட்சி இங்கொரு காட்சி என எடிட்டிங்கில் படத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டுமே என தாறுமாறாக வெட்டி இருப்பது சின்ன குழப்பத்தை புத்தகம் படித்தவர்களின் மத்தியில் எழுப்புகிறது.
திரைக்கதை, நடிப்பில் செலுத்திய கவனத்தை இன்னமும் கூடுதலாக விஷுவலுக்கு மணிரத்னம் செலவிட்டு இருக்கலாம்.
ஆனால், படத்தின் கதையை பார்க்கும் ஆர்வத்தில் இதெல்லாம் மறந்து போகின்றன. நிச்சயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குநர் மணிரத்னத்தின் பெரிய முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.