பெங்களூரில் பாய் ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் போர்ட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் பெண்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.

காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்காக ஆண் நண்பர்கள் தேவை என்பதால் இந்த போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது.

இன்று ஆணும் சரி பெண்ணும் சரி சிறியதொரு ஏமாற்றத்தை கூட தாங்கி கொள்ள இயலாத நிலையில் உள்ளார்கள். அப்படியிருக்கும் போது காதல் தோல்வி என்பது கட்டாயம் ஆறாத ரணம்தான்.

சில நாட்கள்

ஆணும் பெண்ணும் சில நாட்கள் பழகிவிட்டு பிரிந்து போனாலும் இருவருக்கும் அதனால் ஏற்படும் மனக்கலவை ஆறுவதற்கு சற்று தாமதமாகும். இதற்கு வேறு ஒன்று மருந்தாக தேவைப்படுகிறது. அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ கூடவே இருந்து அந்த காயத்தில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும்.

முள்ளை முள்ளால் எடுத்தல்

இது வழக்கம் போல் எல்லா இடங்களிலும் செய்யப்படும் ஒரு விஷயமாகும். ஆனால் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப பெங்களூரில் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது காதலனால் ஏமாற்றமடையும் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர ஒரு போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

டாய்பாய்

இதற்கு ToYBoY என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலில் புக் செய்து கொண்டால் ஆண் நண்பர்கள் வாடகைக்கு கிடைப்பர். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு இந்த போர்ட்டலுக்கான APK பைலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

சமூக ஆர்வலர்கள்

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில் இந்த போர்ட்டலை பயன்படுத்தி பெண்கள் எத்தனை நாளைக்கு வாடகைக்கு எடுத்துவிட முடியும். காதல் தோல்விக்கு இதுதான் மருந்தா? இது போல் வாடகைக்கு ஆள் எடுத்து அவர்களுடன் பழகுவது தான் தீர்வா? காதல் என்பது மன சம்பந்தப்பட்டது தானே. இதுதான் காதலா? ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர், அவர் இல்லாவிட்டால் வேறுஒருவர் என்பதா? இந்த கலாச்சாரம் எப்படி சரிப்பட்டு வரும்.

விபரீதம்

அந்த ஆணை நம்பி இந்த பெண்கள் வெளியே சென்றாலோ தனிமையில் சந்தித்தாலோ தேவையில்லாத பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே பாலியல் சீண்டல்கள் அதிகரித்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டும் போக்கும் உள்ளது. இந்த நிலையில் இது போன்ற போர்ட்டலால் பெண்களுக்கு இது விஷமாகும் என்பது மறுப்பதற்கில்லை.

இது மருந்தல்ல

ஒரு உதாரணத்திற்கு காதல் தோல்வி ஏற்பட்ட பெண் இந்த போர்ட்டலை பயன்படுத்தி 10 நாட்களுக்கு ஒரு பாய் ஃபிரண்டை வாடகைக்கு எடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதன்பிறகு என்னவாகும், மீண்டும் ஏமாற்றம்தானே கிடைக்கும். எனவே பெண்கள் இந்த விபரீதத்தை விலை கொடுத்து வாங்கவே கூடாது. காதல் ரணத்தை ஆற்ற எத்தனையோ நல்ல நிரந்தர மருந்துகள் உள்ளன. இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே