சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசாத் ரவூப் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 66.
பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆசாத் ரவூஃப். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராகவும் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஒரு கிரிக்கெட் வீரராக அறியப்பட்டதைவிட, அம்பயராகத்தான் பிரபலமானார். சர்வதேச கிரிக்கெட்டில் 64 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார்.
64 டெஸ்ட் போட்டிகளில் 49-ல் கள நடுவராகவும், 15 டெஸ்ட் போட்டிகளில் டிவி அம்பயராகவும் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆசாத் ரவூஃப் பணியாற்றியுள்ளார். 2004-2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் அம்பயராக இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்தது.
ஐசிசி எலைட் பேனல் அம்பயராக இருந்த ஆசாத் ரவூஃப், ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கினார். இதுதொடர்பான விசாரணையில் 2016-ம் ஆண்டு அவர் மீதான சூதாட்ட புகார் உறுதியானதையடுத்து அவருக்கு பிசிசிஐ தடை விதித்தது. அதன்பின்னர் அம்பயரிங் செய்யாத ஆசாத் ரவூஃப், அம்பயரிங்கிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் 66 வயதான ஆசாத் ரவூஃப் மாரடைப்பு ஏற்பட்டு லாகூரில் காலமானார். அவரது இறப்பை அறிவித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் வீரர்கள், அம்பயர்கள் பலரும் ஆசாத் ரவூஃப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.