பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, கேப்டன் விராத் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கோலி 24 பந்துகளில் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ்டியன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் நிலைத்து ஆடிய படிக்கல் 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் ஷமி, ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்களான அகர்வால் 57, ராகுல் 39 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் அளித்தனர். ஆனால் இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. மார்கிராம் 20, ஷாருக்கான் 16, ஹென்ரிக்ஸ் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே