ஆபாச படங்களை ஒளிபரப்பிய ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்..!!

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வளர்ந்து வரும் உலகத்தில் தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள், தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாசமான செயல்களை கையில் எடுத்து சமூகத்தை சீரழித்து வருகின்றனர். ஆபாச காட்சிகளை ஒரு சில ஓடிடி தளங்கள், சமூக வலைதள பக்கங்கள் ஒளிபரப்பி வருகிறது. இது மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் (Social Media) மற்றும் ஓடிடி தளங்கள் (OTT Platforms) ஆகியவை மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பெண்கள் பாதுகாப்பு உட்பட சட்ட விதிகளின் கீழ் இந்த தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஓடிடி தளங்களை பொறுத்தமட்டில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஐபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஷாட்ஸ் விஐபி, ஃபியூகி, சிகூஃப்லிக்ஸ், பிரைம் ப்ளே ஆகியவை அடங்கும்.

எச்சரிக்கை மீறி ஒளிபரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே