இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து கிரிப்டோகரண்ஸி குறித்து ட்வீட் ஒன்று ட்வீட்டப்பட்டு இருந்தது.’இந்தியாவில் பிட்காயின் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இந்திய அரசு 500 பிட்காயின்களை வாங்கி நாட்டு மக்களுக்கு வழங்கவிருக்கிறது’ என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குறிப்பிட்ட ட்வீட்டைப் பார்த்தவுடன் பலர் குழப்பத்திலும், சிலர் பதற்றத்திலும் ஆழ்ந்திருப்பார்கள். ஆனால், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு இன்று அதிகாலை ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனைச் சரி செய்து ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுவிட்டதாகவும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.பிரதமரின் ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருந்த ‘பிட்காயின்’ குறித்த ட்வீட்!
ஆனால், ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு, அந்தக் குறிப்பிட்ட பிட்காயின் குறித்த ட்வீட்டை நீக்குவதற்கு முன்பாக அது நாடு முழுவதும் தீயாகப் பரவியிருந்தது. பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட போது பதிவிடப்பட்ட தகவல்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கிலிருந்து செய்யப்பட்ட ட்வீட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் CERT-IN-ஆனது (Computer Emergency Response Team), இந்த ட்விட்டர் ஹேக் எங்கிருந்து செய்யப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து தீவிரமாகத் தேடி வருகிறது. பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் செப்டம்பர் 2020-லும் இதே போல ஹேக் செய்யப்பட்டு எத்திரியம் கிரிப்டோவை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பக் கேட்டுக்கொள்வதாக நிறைய ட்வீட்கள் பிரதமரின் கணக்கிலிருந்து பகிரப்பட்டிருந்தன. ஆனால், அப்போது பிரதமரின் கணக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோவிற்கு ஆதரவான பல செய்திகள் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.