கிரவுட்ஸ்ட்ரைக் என்பது என்ன? உலகெங்கும் வங்கி, விமான சேவைகள் எப்போது சரியாகும்?

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.

பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விமானப் போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘ஃபால்கன் ஆண்டி-வைரஸ்’ (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.

இந்த தகவல் தொழில்நுட்பச் (ஐ.டி.) செயலிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை.

இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் என்ன?

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான ‘கன்டென்ட் அப்டேட்டில்’ ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கிறார் க்ரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் கர்ட்ஸ்.

“பிரச்னை என்னவென்று தெரிந்துவிட்டது. அதனை சரிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

இது மற்ற இயங்கு தளங்களைப் (Operating Systems) பாதிக்கவில்லை. மேலும் இது ஒரு சைபர் தாக்குதல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் கர்ட்ஸ்.

ஆண்டி-வைரஸ் மென்பொருளை உருவாக்கும் க்ரவுட்ஸ்ட்ரைக்கின் புதிய மென்பொருளை அப்டேட் செய்ததால் தான் விண்டோஸில் செயல்படும் கணினிகள் செயலிழந்தன என்ற செய்திகள் தொடர்ச்சியாக வெளியான நிலையில் கர்ட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

உலகமெங்கும் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக பயணிப்பவர்களின் பயண திட்டத்தில் பாதிப்பை உருவாக்கும் என்று முதலீட்டாளர்கள் உணர்ந்த நிலையில் பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட துவங்கியது.

ஐ.டி. செயலிழப்பின் காரணமாக க்ரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 15% வரை வீழ்ச்சி அடைந்தன. மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.

விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா, ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த பிரச்னை எப்போது சரியாகும்?

என்.பி.சி செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்ட்ஸ், தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த செயலிழப்பில் இருந்து மீள்வதை உறுதி செய்வதே அவர் நிறுவனத்தின் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அது தானாக நடைபெறாது என்றும், பிரச்னை சரியாக நேரம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

“இந்த செயலிழப்பால் வாடிக்கையாளர்கள், பயணிகள், மற்றும் இதர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருந்துகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

க்ரவுட்ஸ்ட்ரைக் இந்த ஐ.டி. செயலிழப்பை தடுக்கும் புதிய அப்டேட்டை வழங்கிவிட்டது. ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியிலும் தனித்தனியாக அப்டேட் செய்வது தான் தீர்வளிக்கும்.

இதற்காக ஒவ்வொரு கருவியையும் safe mode-இல் வைத்து ரீபூட் செய்ய வேண்டும். இந்தப் பணி அனைத்து நிறுவனங்களின் ஐ.டி. பிரிவினருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான ‘கன்டென்ட் அப்டேட்டில்’ ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம்

க்ரவுட்ஸ்ட்ரைக் என்றால் என்ன?

நம் நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பின் சிக்கலான தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த க்ரவுட்ஸ்ட்ரைக். டெக்ஸாஸில் அமைந்திருக்கும் ஆஸ்டினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனம் இது. அமெரிக்க பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது க்ரவுட்ஸ்ட்ரைக். S&P 500 மற்றும் நஸ்தாக் குறியீடுகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம்.

அநேக தொழில்நுட்ப நிறுவனங்களைப் போன்றே இந்த நிறுவனமும் மிகச் சமீபத்தில், அதாவது 2013-ஆம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே நன்கு வளர்ச்சியடைந்த இந்த நிறுவனத்தில் தற்போது 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

சைபர் செக்யூரிட்டி சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் என்பதால், இணையதளங்கள் முடக்கப்படும் போது அதனைச் சரிசெய்ய தேவையான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.

சைபர் தாக்குதல்களுக்கு ஆளான மிக முக்கியமான பெரிய நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கியுள்ளது க்ரவுட்ஸ்ட்ரைக். 2014-ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை சரி செய்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.டி. பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் இந்த நிறுவனமே, தவறாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளால் பிரச்னைக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, 24,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இது பிரச்னை எவ்வளவு பெரியது என்பதைக் காட்டிலும், பிரச்னைக்கு வழங்கப்படும் தீர்வு எத்தனை சவால்களை கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

க்ரவுட்ஸ்ட்ரைக்கின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிகப்பெரிய நிறுவனங்கள். எனவே ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை கணினிகள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை மதிப்பிடுவது சவாலானது.

எந்தெந்த சேவைகள் பாதிக்கப்பட்டன?

‘Piecemeal Fashion’ என்ற நிறுவனம் முதன்முறையாக இந்தப் பிரச்னையை பொதுவெளிக்குக் கொண்டுவந்தது. ஆஸ்திரேலியாவில் முதலில் ஐ.டி. செயலிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகின. பிறகு உலகின் பல்வேறு பாகங்களிலும் செயலிழப்பு தொடர்பான புதிய செய்திகள் வெளிவர துவங்கின.

விமான சேவை

யுனைடட், டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் உலங்கெங்கிலும் தங்களின் விமானங்களை இன்று இயக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் விமான சேவைகள் தாமதமாக துவங்கின. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

டோக்யோவின் நரிட்டா, இந்தியாவின் டெல்லி விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் ஸ்டான்ஸ்டெட், காட்விக் விமான நிலையங்கள், ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபூல் விமான நிலையம் உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் ஐ.டி. செயலிழப்பின் காரணமாக சேவைகள் தாமதமானது என்று தெரிவித்தன.

மூன்றாம் தரப்பு சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக தங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது ரியான்ஏர் என்ற ஐரோப்பிய விமான சேவை.

பிரிட்டனில் ரயில் நிறுவனங்களும் இந்த ஐ.டி. செயலிழப்பால் பாதிக்கப்பட்டன.

பணபரிவர்த்தனை சேவைகளில் பிரச்னை

கணினி சேவைகளைத் தொடர முடியாத காரணங்களால் விற்பனை மையங்களில் பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளப்பட்டது.

பிரிட்டனில், மோரிசன்ஸ், வெய்ட்ரோஸ் உள்ளிட்ட சூப்பர் மார்க்கெட்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவின.

ஆஸ்திரேலியாவின் வூல்வொர்த்ஸ், கோல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இதே நிலை நீடித்தது.

இது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய தேசிய வங்கியின் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் இதர சேவைககள்

இஸ்ரேலில் 15 மருத்துவமனைகள் மேனுவல் செயல்பாட்டுக்கு மாறின என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளில் எந்த பிரச்னையும் இதனால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவசரஊர்தி சேவைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிரிட்டனில், தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக அறுவை சிகிச்சைகளுக்கான முன்பதிவு செய்வதில் பிரச்னைகள் ஏற்பட்டது.

எதனால் இந்த தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டது என்று தெரிய வந்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அலாஸ்காவில் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்கை நியூஸ் போன்ற ஒளிபரப்பு சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பங்கு வர்த்தகம் வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்காக பிரத்யேகமாக தகவல்களை வழங்கி வந்த அதன் செய்தி பிரிவு பாதிக்கப்பட்டது.

போலாந்தின் கடான்ஸ்க் (Gdansk) பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கண்டெய்னர் முனையமான பால்டிக் ஹப்பில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கண்டெய்னர்கள் எதையும் துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே