மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) வெளியிட்டுள்ளது. மணிப்பூர் முதலமைச்சராக இருந்த என் பிரேன் சிங் தன் பதவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் நீண்ட காலமாக இன ரீதியான கலவரங்கள் நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சராக இருந்த பிரேன் சிங் அதைத் தடுக்கத் தவறியதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
முன்னதாக, பாஜகவை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள், பிரேன் சிங்கை பதவி நீக்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினர்.
அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் சத்யபிரதா சிங், அமைச்சர்கள் தொங்கம் பிஸ்வஜித் சிங், யும்னம் கெம் சந்த் சிங் உட்பட பலரும் அக்கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
முதலமைச்சர் ராஜினாமா
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லி சென்ற பிரேன் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
பின்னர், அந்நாளே மணிப்பூர் சென்றடைந்த பிரேன் சிங், தன் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
புதிய முதலமைச்சர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தினருக்கும் மற்றும் சிறுபான்மை குக்கி சமூகத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலம் மற்றும் செல்வாக்கு தொடர்பாக, இன ரீதியான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இரு சமூகங்களுக்கும் இடையே மே 23, 2023-ல் வன்முறை தொடங்கியது.

மணிப்பூர் எங்கு உள்ளது? அங்கு வசிப்பவர்கள் யார்?
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூர், மியான்மருடனான எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள் சூழ அமைந்துள்ளது இந்த மாநிலம். இங்கு 33 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
மாநிலத்தின் பாதிக்கும் மேற்பட்டோர் மெய்தேய் சமூகத்தை சேர்ந்தவர்கள். குக்கி மற்றும் நாகா சிறுபான்மை பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் 43% பேர் உள்ளனர்.
மெய்தேய் சமூக மக்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரி வருகின்றனர், இதுதான் அங்கு நிலவும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
ஆனால், அரசாங்கம் மற்றும் சமூகத்தில் நன்கு நிலைபெற்றுள்ள அவர்களின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தினால், குக்கி பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் குடியேறவும் நிலம் வாங்கவும் மெய்தேய் சமூகத்தினருக்கு வழிவகுக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
மேலும், தங்களை போர் மற்றும் போதைப் பொருட்கள் மூலம் முற்றிலும் அழிக்க நினைப்பதாக மெய்தேய் அரசாங்கம் மீது குக்கி பழங்குடியினர் குற்றம் சாட்டினர்.
மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக வந்து மணிப்பூரில் குடியேறுவதும் பதற்றத்தை அதிகரித்தது.
அதிகரித்து வரும் மக்கள்தொகையும் மாநிலத்தில் நிலப் பயன்பாடு மீதான அழுத்தத்தை அதிகரித்தது.
நன்றி பிபிசி தமிழ்