BREAKING NEWS : உன்னாவ் பாலியல் வழக்கு – குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என தீர்ப்பு!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி தீஸ் ஹசாரே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரும் 19-ம் தேதி அவருக்கான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், சிறுமி ஒருவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இதுகுறித்து புகாரளித்த சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்டார்.

மேலும் வழக்கு விசாரணைக்காக சிறுமியும், அவரது வழக்கறிஞரும் நீதிமன்றத்திற்கு சென்ற போது, அவர்கள் சென்ற வாகனம், எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிறுமிக்கும், அவரது வழக்கறிஞருக்கும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, எம்.எல்.ஏ மீது சி.பி.ஐ. 5 வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே, குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கடந்த 9-8-2019 அன்று டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் போக்சோ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்துகொண்டார்.

அன்றிலிருந்து தொடங்கிய விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதனை அடுத்து இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

போக்சோ வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 19ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

செங்கார் மீதான மற்ற வழக்குகளின் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே