சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இம்முறையும் அதிரடி தொடக்க முயற்சித்தனர்.

தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே கில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அதேஓவரின் கடைசி பந்தில் இரண்டாவது ரன் எடுக்க முயன்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியைத் தொடர்ந்தார். இதனால், முதல் 5 ஓவர்களில் கொல்கத்தா 50 ரன்களை எட்டியது.

இதனால், ஷர்துல் தாக்குரை 6-வது ஓவரில் அறிமுகப்படுத்த, முதல் பந்திலேயே வெங்கடேஷ் (18 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அந்த ஓவரை மெய்டன் ஓவராகவும் வீசி மிரட்டினார் ஷர்துல்.

இதன்பிறகு களமிறங்கிய இயான் மார்கனால் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால், ரன் ரேட்டில் தொய்வு ஏற்பட்டது. ஜோஷ் ஹேசில்வுட் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று பாப் டு பிளெஸ்ஸியின் சிறப்பான கேட்ச்சால் 14 பந்துகளில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மார்கன்.

முதல் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்த கொல்கத்தா அடுத்த 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னைப் பந்துவீச்சாளர்கள் இந்த நிலையை சிறப்பாகப் பயன்படுத்தினர். அதிரடி காட்டி வந்த திரிபாதி (33 பந்துகள் 45 ரன்கள்) விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.

இதையடுத்து, சாம் கரன் வீசிய 15-வது ஓவரில் ஆண்ட்ரே ரஸல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸரைப் பறக்கவிட மீண்டும் அதிரடிக்கு மாறத் தொடங்கியது.

ஆனால், தீபக் சஹார் வேகத்தடையாக 16-வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஷர்துல் தாக்குர் 17-வது ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுத்து அச்சுறுத்தலான ரஸல் (20) விக்கெட்டை வீழ்த்தினார்.

எனினும், தீபக் சஹாரின் 18-வது ஓவரில் நிதிஷ் ராணா 2 பவுண்டரிகளை விளாசினார். கரனின் 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார்.

ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த கார்த்திக், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் தவறான பீல்டிங்கால் பவுண்டரி கிடைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராணா 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் ஷர்துல் தாக்குர், ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே