மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துளார்.

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.

தேர்தலை திருவிழா போல நடத்துவது நமது நாட்டில்தான். லோக்சபா தேர்தலுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்தலும் எங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக உள்ளது . தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கேற்க வேண்டும்.

லோக்சபா தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்படும். 1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளார்கள். இந்த மக்களவை தேர்தலில் 1.82 கோடி வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்கிறார்கள். அவர்களில் 82 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள்.

இந்த தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 49,72,31,994, பெண் வாக்காளர்கள் 47,15,41, 888, மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,055 பேர் உள்ளனர். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே