டிக்டாக்கில் சீமானுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள் கைது!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பட்டாக்கத்தியுடன் மிரட்டல் விடுத்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரியில் இளைஞர்கள் கும்பல் ஒன்று சமீப நாட்களாக கஞ்சா புகைத்துவிட்டு பெரிய பட்டாக்கத்தியை கையில் வைத்துக் கொண்டு சாலையில் செல்வோரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அந்த கஞ்சா கும்பலைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடப்பேரியைச் சேர்ந்த 22 வயது மணிகண்டன், 24 வயதான கிஷோர், 21 வயதான நிஷாந்த், 22 வயதான அஜித் மற்றும் 23 வயதான சுரேஷ் ஆகிய ஐந்து இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தியையும் 300 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களது செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போதுதான் அதிர்ச்சிகள் காத்திருந்தன.

கஞ்சா போதையில் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் பாடலைப் பதிவு செய்து அதை டிக்டாக்கிலும் பதிவேற்றியிருந்தது அம்பலமானது.

போலீசார் அவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது , விளையாட்டாகவே அந்த வீடியோக்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்த பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அதேநேரம் கானா பாடல்களில் நாம் தமிழர் சீமானைக் குறிப்பிடவில்லை என்றும்; அந்த சீமான் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை என்றும் சிலர் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே