தவணைத்தொகையை கட்டாத பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய பஜாஜ் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

கடன் பெற்ற பெண் ஒருவர் தவணைத்தொகையை கட்டாதததால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக பேசிய பெண் ஒருவர் மிகவும் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் நிறுவனத்தில் புகுந்து கணினி மற்றும் நாற்காலிகளை சேதப்படுத்தியதோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சரஸ்வதி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் தனிநபர் கடன் பெற்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சரஸ்வதி தவணைத்தொகை கட்டாத நிலையில், பஜாஜ் நிறுவனம் சார்பாக சரஸ்வதியை தொடர்பு கொண்ட பெண் பணியாளர் ஒருவர், தவணை தொகை கட்டாததால் எழும்பூர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞரோடு வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு எழும்பூருக்கெல்லாம் தன்னால் வரமுடியாது என்றும், கார் ஏற்பாடு செய்து கொடுத்தால் வருவதாக சரஸ்வதி கூறினார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த பஜாஜ் பைனான்ஸ் சார்பாக பேசிய கால்செண்டர் பணியாளர், சொல்லமுடியாத வார்த்தைகளால் சரஸ்வதியை வசைபாடியுள்ளார்.

இதுகுறித்து தனது கணவரிடம் சரஸ்வதி கூற, ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், ஈஸ்வரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த தொலைபேசிகள், கம்ப்யூட்டர்கள், இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

அங்கு வந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தனது மனைவியை தரக்குறைவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தன் உடன் வந்தவர்களுடன் ராஜா அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஊரடங்கு காலத்தில் கடன்காரர்களிடம் இருந்து தவணைத்தொகையை நிர்பந்தித்து வசூலிக்க கூடாது என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூறியுள்ள நிலையில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தவணைதொகையை மிரட்டி வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே