பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 1911 கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சசிகலா 237 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக கொடுத்ததும் தெரிய வந்து உள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க போவதாக கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2014-ம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு அமல்படுத்தியது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வந்தவுடன் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் மக்கள் பல நாட்களாக காத்துக் கிடந்தனர்.
தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம் அது.
ஜெயலலிதாவின் அருகில் இருந்த அவரை கவனித்துக் கொண்டிருந்த சசிகலா தம்மிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளையும் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியில் இறங்கினார்.
2016 நவம்பர் எட்டாம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை 1674 கோடியே 50 லட்ச ரூபாயை பெட்டி பெட்டியாக வாகனங்களில் பணத்தை ஏற்றி அனுப்பி புதுச்சேரியில் ஒரு ரிசார்ட், இரண்டு வணிக வளாகங்கள், மென்பொருள் நிறுவனம், காகித ஆலை, சர்க்கரை ஆலை, 50 காற்றாலைகளை சசிகலா வாங்கி குவித்ததாக தெரியவந்து உள்ளது.
இது மட்டுமின்றி 247 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமிக்கு ஒப்பந்த அடிப்படையில் சசிகலா வழங்கியிருப்பதாகவும் வருமான வரித்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வட்டியில்லா கடனாக கொடுத்து ஒரு ஆண்டுக்குள் புதிய ரூபாய் நோட்டுக்களாக திருப்பி அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 6% வட்டியுடன் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் வாக்குமூலத்தை பெற்றுள்ள வருமான வரித்துறையினர் மொத்தம் 1911 கோடியே 50 லட்சம் ரூபாயை வருமான வரிக் கணக்கில் சசிகலா காட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் ஜெயா பப்ளிகேஷன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாகவும் வருமான வரித்துறையினர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.