புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதலமைச்சர் நாராயணசாமி..??

புதுச்சேரி சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நியமன உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும் பட்சத்தில் நாராயணசாமி அரசு தப்பி பிழைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி அரசியலில் உச்சகட்டப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இரண்டு பேர் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை குறைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஆனால், நியமன உறுப்பினர்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சட்டப்பேரவையில் இப்போது உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் நாராயணசாமிக்கு ஆதரவு அதிகம் இருப்பதை காண முடியும்.

புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்பது பேர், திமுக உறுப்பினர்கள் இருவர், சுயேட்சை ஒருவர் என்று நாராயணசாமிக்கு 12 பேர் ஆதரவு இருக்கிறது.

எதிர்கட்சிகள் வசம் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேர், அதிமுக உறுப்பினர்கள் நான்கு பேர் என்று 11 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த கணக்கின் படி பார்த்தால் நாராயணசாமிக்கு ஒரு வாக்கு கூடுதலாக உள்ளது.

நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டு என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனையில் சட்டப்பேரவையில் கடைசி நேரத்தில் எப்படி முடிவு எடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே நாராயணசாமி அரசு நீடிக்குமா இல்லையா என்பது தெரியும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே