நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..!!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நாளை (பிப்.23) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், 2021-22 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்.23(நாளை) காலை 11 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். 

பகல் 11 மணிக்கு 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அளிக்கப்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒட்டி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி ஏற்கெனவேஅறிவித்துள்ளார்.

இதற்கான தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதுபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட முதல்வரின் பல்வேறு அறிவிப்புகளுக்கும் நிதி ஒதுக்கப்படும்.

இவைதவிர, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் பெறப்படும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யும்.

பிப்.25-ம்தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தாண்டின் பேரவை முதல் கூட்டத் தொடர் கடந்த 2-ம் தேதிநடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.

இந்த கூட்டத்தை திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

அப்போது திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ‘இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பது குறித்த அப்போது முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றால் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியது, நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பும்.

இந்த ஆட்சியின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே