ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ..!!! (வீடியோ)

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 48 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்பட பல்வேறு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்துவரும் காட்டுத்தீயால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

1 கோடியே 20 லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், ஆயிரத்து 400 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீயை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 48 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Wildfires in Australia .. !!!

தீயில் சிக்கி ஏற்கெனவே 21 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கங்காரு தீவில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டுத்தீ சூழ்ந்ததில், அதில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆகியுள்ளது.

விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றன.

காட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு புகைமூட்டம் இருப்பதால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி, நியூசிலாந்திலும் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜனவரி 13 முதல் 16 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தங்கள் நாட்டின் பேரிடரை கருத்தில் கொண்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே