இவாங்கா டிரம்ப் – ன் நேர்முக உதவியாளருக்கு கொரோனா

வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதுவரை 13 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்றாவது நபராக இவருக்கு கொரோனா தொற்று உள்ளது.

2017-ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகராக அவரது மகள் இவாங்கா உள்ளார். 

கொரோனா ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து கடந்த 2 மாதமாக இவாங்கா வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.

அதனால் அவரது நேர்முக உதவியாளர் பல வாரங்களாக இவாங்காவை சந்திக்கவில்லை.

இவாங்காவிற்கு அறிகுறி ஏதுமில்லை. இருப்பினும் இவாங்காவிற்கும் அவரது கணவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நேற்று வெளியான அம்முடிவுகளில் நெகடிவ் என்றே வந்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா உள்ளது தெரியவந்துள்ளது.

மில்லருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தொடர்புகொண்டு நபர்களை கண்டறியும் நடவடிக்கை வெள்ளை மாளிகையில் நடந்துள்ளது.

மேலும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா, யாருக்கேனும் வெப்பநிலை அதிகம் உள்ளதா என உறுதி செய்யவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வார தொடக்கத்தில் அரிசோனா பகுதியில் முகக்கவச தொழிற்சாலையை பார்வையிட்ட போது டிரம்ப் முகக்கவசம் அணிய மறுத்துவிட்டார்.

தற்போது வெள்ளை மாளிகையிலேயே கொரோனா பரவி, அனைவருக்கும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியிருப்பதால் டிரம்பை சமூக ஊடகங்களில் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே