பூர்வ குடிகளை வெளியேற்றி விட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சென்னையை தாரைவார்க்க முயல்வதாக கடந்த சில ஆண்டுகளாகவே உரத்த குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் சென்னையில் அரங்கேறிய சம்பவம் ஒன்று மனித உரிமை குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து கூவம் ஆறு மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பாக மாற்று இடங்களில் குடியமர்த்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள 14257 வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டது.

இவ்வாறு அகற்றப்படும் குடும்பத்தினர் பெரும்பாக்கம் கண்ணகி நகர் செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் மறு குடியமர்த்தும் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சுமார் 25 கிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கும் பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் குடியேறுவதற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வேலைவாய்ப்பை இழந்துவிட்டு இப்பகுதிகளுக்கு சென்று வசிப்பதால் தங்களின் வாழ்வாதாரமும், பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 2092 குடும்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளியதுடன் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மக்களை சமாதானம் செய்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ததாக வீடியோவும் வெளியானது.

இது குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லியதாகவும் வீடுகளை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கூவம் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் வாக்குறுதிகள் பின்பற்றப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தீவுத் திடல் அருகே உள்ள சத்தியவாணி முத்து நகர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மக்களை மறு குடியமர்த்தம் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டிய திருமாவளவன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூவம் கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றி விட்டு வீடு வழங்குவதில் டோக்கன் வழங்குவதுடன் இடைத்தரகர்கள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கே டோக்கன் வழங்கப்படுவதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

சாலை விரிவாக்கப் பணி என்று சொல்லி எண்ணூர் விரைவு சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகளை எல்லாம் இடித்துவிட்டு மக்களை வெளியேற்றியது போலவே சத்தியவாணி முத்துநகரில் வாழும் மக்களையும் வெளியேற்றிவிட கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே