USA : கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்

அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மின்னபொலிஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞரை, பொலிஸ் அதிகாரி ஒருவர் தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, பொலிஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல், நேற்று காலை, 6 மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பல மணி நேரமாக எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காரில் வந்த ஒரு மர்ம நபர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார் இதில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

புளோரிடா மாகாணத்தின் டெம்பிள் ரெரேஸ் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே, ஹேபா மும்தாஜ் அலாஜாரி, 21, என்ற பெண், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்தினார்.

இதைக் கண்ட மற்ற பொலிஸார், அப்பெண்ணை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கத்தியால் குத்தியதில், பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்கா முழுவதும் போராட்டம் பரவுகின்றது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே