சிறுமியை கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி..!

ஆண் வாரிசு வேண்டி 16 வயது சிறுமியை கடத்தி கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய அந்த பெண்ணின் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் – செல்லக்கிளி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தம்பதிக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறந்ததால் கணவனுக்கு 2வது திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார் செல்லக்கிளி.

மனைவியே ஆசைப்படும்போது வாய்ப்பைத் தவற விடக்கூடாது எனக் காத்திருந்துள்ளார் அசோக்குமார்.

இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 10ஆம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு வறுமை காரணமாக கூலி வேலைக்குச் சென்று வந்த 16 வயது சிறுமி இவர்களோடு சகஜமாக பழகி வந்துள்ளார்.

சிறுமியை எப்படியாவது கணவனுக்கு திருமணம் செய்துவைத்துவிட செல்லக்கிளி முடிவு செய்த நிலையில், சிறுமியுடன் அசோக்குமாரும் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், ஆண் வாரிசு இல்லாததால் என் மனைவியே உன்னை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார் என்று சிறுமியிடம் கூறிய அசோக்குமார், தன்னை திருமணம் செய்துகொண்டால் வசதியாக வாழ வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த வியாழக்கிழமை சிறுமியின் தந்தையிடம் சென்று, மகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஓகலூர் கிராமத்துக்கு தம்பதியர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து சிறுமியை தனது கணவருக்கு திருமணம் செய்துவைத்த செல்லக்கிளி, பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தில் தனக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் இருவரையும் தங்கவைத்துள்ளார்.

அங்கு இரு தினங்களாக சிறுமியை அசோக்குமார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே சிறுமி குறித்து செல்லக்கிளியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சரியாக பதிலளிக்காததால் போலீசில் புகாரளித்துள்ளார் அவரது தந்தை.

விசாரணையில் இறங்கிய போலீசார், கோனூரில் மூவரும் தங்கியிருப்பதை அறிந்து அழைத்து வந்தனர்.

பின்னர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, சீரழித்த குற்றத்துக்காக இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு ஒரு சிறுமியின் வாழ்வை சீரழித்த தம்பதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களது மூன்று பெண் குழந்தைகளும் நிர்கதியாகியுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே