திருச்சி நகைக்கொள்ளை – முருகனின் அண்ணன் மகன் திருவாரூரில் கைது

திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மூன்றாவது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவரின் அண்ணன் மகன் முரளியை திருச்சி தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே மணிகண்டன் மற்றும் தேடப்படுபவரில் ஒருவரான சுரேஷ்-இன் தாய் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய சுரேஷ் என்பவரை நண்பர்களான ரவி, குணா, மாரியப்பன் ஆகியோருடன் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து திருவாரூர் சீராத்தோப்பில் உள்ள முருகனின் அண்ணன் மகன் முரளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நகைக்கொள்ளை வழக்கில் மற்றவர்கள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள்??கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே வைக்கப்பட்டு உள்ளன?? என்பன போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் உறவினர்கள் 14 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் கொள்ளையர்கள் போட்ட துளை அடைக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே