அரசியல் சாசனத்துக்கு எதிரான பிற்போக்கான சட்டம் என குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக மக்களை பிளவுபடுத்துகிற பிற்போக்கான சட்டம் என கூறியுள்ளார்.
தற்போது குடியுரிமை சட்டத் திருத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே இதனை மத்திய அரசு செய்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மற்ற நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என கூறும்போது, ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படாது என்று மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அகதிகளாக வரும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது என கூறுவதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், இதனை எதிர்க்க முதுகெலும்பு இல்லாத அரசாக அதிமுக உள்ளது எனவும் சாடியுள்ளார்.
மேலும் தமிழகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து திமுக எப்போதும் போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.