காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. ஆணையத்தின் இந்த 14-வது கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் தொடங்கியுள்ளது. தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல பிற மாநிலங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
ஆணைய தலைவர் எஸ்.ஏ.ஹல்தர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காவிரி நீர், மேகதாது அணை பற்றி விவாதம் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், கடந்த மாதம் 23-ம் தேதி வரை கர்நாடகா தமிழகத்துக்கு 37.3 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பாய்ச்சி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, ‘இதுபற்றி பலமுறை கூறியும் கர்நாடக அரசு அதை கேட்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, கர்நாடகா அரசு மதிக்கவில்லை. இப்படியான அவமதிப்புகளை தவிர்த்துவிட்டு கர்நாடக அரசு விரைவாக தமிழகத்துக்கு கடந்த மாத கணக்கான நிலுவையில் உள்ள 28 டி.எம்.சி. காவிரி நீரை தர வேண்டும்’ என்று வலியுறுத்தியது.
கடந்த மாதத்துக்கான நீர் மட்டுமன்றி, இந்த மாதத்துக்கான நீரிலும் 20 டி.எம்.சி. நீர் தரப்படாமல் இருப்பதால், மொத்தம் 48 டி.மி.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தற்போதைக்கு தமிழகம் இதுசார்ந்த குற்றச்சாட்டை ஆணையத்தில் வைத்துள்ளது. அந்தவகையில், ‘காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை’ எனக்கூறி தமிழகம் கர்நாடகா அரசை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேபோல கர்நாடகா அரசு சார்பில் மேகதாது விவகாரம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், மேகதாது திட்ட வரைவறிக்கை உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்படவுள்ளது. இவற்றுடன் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நதிநீர் பங்கீடு குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இவைமட்டுமன்றி உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையிலுள்ள இரு மாநிலங்களுக்கிடையேயான காவிரி நதிநீர் பங்களிப்பு தொடர்பான வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.