கொரோனா வைரஸ் பிற வைரஸ்களைவிட ஏன் மிகவும் ஆபத்தானது?

ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது.

இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஏன் பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், வைரஸ் பரவும் போதெல்லாம் இவ்வாறு உலகம் முடங்குவது இல்லை. இதற்கு முன்பு இந்தளவுக்கு உலகம் முடங்கியதும் இல்லை.

கொரோனா வைரஸால் முடங்கி இருக்கிறது. ஏன் கொரோனா வைரஸ் அச்சமூட்டுவதாக இருக்கிறது?

ஏமாற்றுவதில் அரசன்

நோய் தொற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இந்த வைரஸ் உடலை ஏமாற்றும் ஆற்றல் கொண்டது.

நமது நுரையீரலில் வேகமாகப் பரவும். ஆனால், நம் உடலின் எதிர்ப்பு சக்திக்கு எல்லாம் சரியாக இருப்பது போன்றே தோன்றும்.

இது தொடர்பாகப் பேசும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் லெஹ்னர், “இது மிகவும் புத்திசாலித்தனமான வைரஸ். உங்கள் மூக்கை வைரஸ் தொழிற்சாலையாக மாற்றும். ஆனால் எல்லாம் சரியாக இருப்பது போலவே தோன்றும்,” என்கிறார்.

நமது உடலில் உள்ள உயிரணுக்கள் ஒரு வேதிப்பொருளை வெளிப்படுத்தும். அதன் பெயர் இண்டெர்ஃபெரோன்ஸ்.

ஒரு வைரஸ் இந்த வேதிப்பொருளைக் கடத்துவது நம் உடலுக்கும், எதிர்ப்பு சக்திக்கும் ஓர் எச்சரிக்கை சமிக்ஞை.

ஆனால் கொரோனா வைரஸுக்கு ஓர் ஆற்றல் இருக்கிறது. அதாவது இந்த வேதிப்பொருள் கொடுக்கும் சமிக்ஞையை இல்லாமல் செய்யும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உங்களுக்கே தெரியாது என்கிறார் பேராசிரியர் பால் லெஹ்னர்.

இந்த வைரஸ் தாக்கிவிட்டு ஓடிவிடும் கொலையாளியைப் போன்றது.

GETTY IMAGES

ஒரு கட்டத்தில் நம் உடல்நிலை முடியாமல் போன பிறகு நம் உடலில் உள்ள இந்த வைரஸ் உச்சத்தை அடையும்.

ஆனால், இதற்குக் குறைந்தது ஒரு வார காலம் எடுக்கும். நம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதல் ஒரு வாரம் நமக்கு எதுவுமே தெரியாது.

நாம் குணம் அடைவது அல்லது மரணம் அடைவதற்கு முன்பே அந்த வைரஸ் வேறொருவர் உடலுக்கு சென்று இருக்கும்.

நீங்கள் செத்துவீட்டீர்களா என்றெல்லாம் அந்த வைரஸ் கவலை கொள்ளாது. இது உங்களை தாக்கிவிட்டு ஓடிவிடும் வைரஸ் என்கிறார் பேராசிரியர் லெஹ்னர்.

2002ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் – கொரொனா வைரஸுடன் இந்த வைரஸ் முரண்படும் இடம் இது தான். சார்ஸ் உடனடியாக சமிக்ஞை காட்டும். உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்.

நம் உடல் தயாராக இல்லை

உங்களுக்கு இதற்கு முந்தைய கொரோனா தொற்று நினைவிருக்கிறதா?

2009ஆம் ஆண்டு H1N1 வைரஸ் குறித்த அச்சம் எங்கும் இருந்தது.

ஆனால், அந்த வைரஸ் எதிர்பார்த்த அளவும் மரண வைரஸாக மாறவில்லை. அதற்கு காரணம் உடலில் அந்த வைரஸை உணரும் எதிர்ப்பு சக்தி இருந்ததுதான்.

இது குறித்து பேசும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ட்ராஸி ஹசெல், “இந்த வைரஸ் புதியது. இதன் காரணமாக நம் உடலில் இதற்கான எதிர்ப்பு சக்தி இருக்காது. இதனால் இதற்கான பாதுகாப்பும் இருக்காது” என்கிறார்.

இதனை எளிதாக விளக்க வேண்டுமானால், ஐரோப்பியர்கள் மூலமாக சின்னம்மை பல இடங்களுக்கு பரவிய போது, அது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தியது போன்றதுதான் இதுவும்.

புதிய வைரசுடன் போராட, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பல பரிசோதனைகளை செய்யும். ஆனால், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முன்பே பலவீனமாக இருப்பதால், அவர்களால் இந்த வைரஸை எதிர்த்து போராடுவது கடினமாக ஆகிறது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் மரோ கியாகோ, “கோவிடின் பலதன்மைகள் தனித்துவமானது. இது வேறு எந்த பொதுவான வைரஸ் நோயிலிருந்தும் வேறுபட்டது,” என்கிறார்.

நுரையீரல் உயிரணுக்களை கொல்வதை மட்டும் இந்த கொரோனா வைரஸ் செய்வதில்லை. இது அதனை முழுவதுமாக சிதைத்துவிடும்.

இது மிகவும் விசித்திரமான தொற்று என்கிறார் அவர்.

உடல் பருமனும் கொரோனாவும்

உடல் பருமன் உள்ளவர்களை கொரோனா தாக்கினால், அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஸ்டீஃபன் ஒ ரஹிலி, “உடல் பருமனுக்கும் இதற்கு முன்பு பரவிய வைரஸ் தொற்றுகளுக்கும் பெரிதாக தொடர்பு இல்லை. ஆனால், கொரோனா வைரசுக்கு இருக்கிறது,” என்கிறார்.

உடல் முழுவதும் உள்ள கொழுப்பு, குறிப்பாக நுரையீரலில் உள்ள கொழுப்பு, வளர்சிதை மாற்ற இடையூறை ஏற்படுத்துகிறது. இது கொரோனா வைரஸுடன் இணைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Source : BBC Tamil

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே