பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படித்த அனைவருக்கும் பல்வேறு கேள்விகள் எழும்.. அதில் முக்கியமானது ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற கேள்வியே முதன்மையானதாக இருக்கும்.. ஆம்.. 1000 ஆண்டுகளை கடந்தும் இன்றும் இது ஒரு விவாத பொருளாகவே உள்ளது..

சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.. தமிழ் இலக்கியத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நாவல் என்றே சொல்லலாம்..

பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பலருக்கும் அது நிறைவேறாத ஆசையாக இருந்தது..

ஆனால் ஒருவழியாக, பல முயற்சிகளுக்கு பிறகு, மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடித்துள்ளனர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..

மேலும் படக்குழு புரோமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், பொன்னியின் செல்வன் நாவல் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படித்த அனைவருக்கும் பல்வேறு கேள்விகள் எழும்.. அதில் முக்கியமானது ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற கேள்வியே முதன்மையானதாக இருக்கும்.. ஆம்.. 1000 ஆண்டுகளை கடந்தும் இன்றும் இது ஒரு விவாத பொருளாகவே உள்ளது..

சரி.. யார் இந்த ஆதித்த கரிகாலன்..? சோழ மன்னனான சுந்தர சோழருக்கு 3 பிள்ளைகள்.. அவரின் மூத்த மகன் தான் ஆதித்த கரிகாலன்.. 2-வது குந்தவை.. 3வது அருள்மொழி வர்மன்.. இவர் பின்னாளில் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார்.. சுந்தர சோழருக்கு பிறகு ஆதித்த கரிகாலன் தான் அரசராக வேண்டும் என்று அவருக்கு இளவரசர் பட்டம் கட்டப்பட்டது.. அடுத்த அரசராக பொறுப்பேற்க இருந்த நிலையில் தான் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டார்..

பொன்னியில் செல்வன் நாவலில் கூட கல்கி ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை தெளிவாக கூறாமலே கடந்திருப்பார்.. அந்த நாவலை பொறுத்தவரை கடம்பூர் சம்புரவையர் மாளிகையில் இந்த கொலை நடக்கும்.. பொன்னியின் செல்வனின் ஆகச்சிறந்த கற்பனை கதாப்பாத்திரமான நந்தினியை பார்க்க செல்லும் போது ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவார்.. அந்த அறையில் வந்தியத்தேவனும் ஒளிந்திருப்பார்.. பழுவேட்டரையரும் மறைந்திருப்பார்.. அறைக்கு பின்னால் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் ரவிதாசன் உள்ளிட்டோரும் காத்திருப்பர்..

நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கு உணர்வுப்பூர்வமான வாக்குவாதம் நடக்கும்.. பின்னர் நந்தினி அழும் சத்தம் கேட்கும்.. ஆதித்த கரிகாலன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பார்..

நந்தினி அவரை கொன்றாளா..? அல்லது பெரிய பழுவேட்டரயரையரா.? அல்லது ரவிதாஸன் உள்ளிட்ட ஆபத்துவிகளா..? ஆதித்த கரிகாலனை யார் கொன்றது என்பது தெரியாது.. ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டாரா என்பதும் தெரியாது.. ஆனால் ஆதித்த கரிகாலனை கொன்ற பழி வந்தியத்தேவன் மீது விழுந்துவிடும்..

ஒரு கட்டத்தில் சோழ சபையில் நான் தான் கொன்றேன் என பழுவேட்டரையர் ஒப்புக்கொள்வார்.. உண்மையிலேயே ஒருவேளை பழுவேட்டரையர் தான் ஆதித்த கரிகாலனை கொன்றாரா என்றால் அதுவும் இல்லை.. வந்தியத்தேவனை கொலைப் பழியில் இருந்து காப்பாற்றவே அவர் அவ்வாறு கூறியிருப்பார்.. எனவே ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற கேள்விக்கு, பொன்னியின் செல்வன் நாவலில் கொலையாளி இவர் தான் என்று கல்கி யாரையும் வெளிப்படையாக கூறியிருக்கமாட்டார்..

சரி.. உண்மை வரலாற்றில் ஆதித்த கரிகாலனை கொன்றது என்பது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது..? சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டில் ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது ஆதித்த கரிகாலனை கொன்ற துரோகிகளான பாண்டிய நாட்டை சேர்ந்த சோமன, பிரமாதிராஜன், ரேவதாச கிரமவித்தன், ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரமாதிராஜன் பற்றி கூறப்பட்டுள்ளது..

ஆதித்த கரிகாலன் வீர பாண்டியனின் தலையை வெட்டி, கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, பாண்டியனின் ஆபத்துதவிகள் ரவிதாசன் தலைமையில் ஆதித்த கரிகாலனை கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.. எனினும் ஆதித்த கரிகாலன் மறைவுக்கு பிறகு ராஜராஜ சோழன் மன்னராக பொறுப்பேற்க வில்லை.. ஆதித்த கரிகாலன், ராஜ ராஜ சோழனின் சித்தப்பாவான உத்தம சோழன் ஆட்சி பொறுப்பேற்பார்..

இந்த உத்தம சோழன் யார்..? 

முதலாம் பராந்தகருக்கு இரு மகன்கள்.. ஒருவர் கண்டராதித்த சோழன்.. மற்றொருவர் அரிஞ்சய சோழன்.. முதலாம் பரந்தாகருக்கு பின் கண்டராதித்தர் மன்னர் பொறுப்பேற்கிறார்.. அவருக்கு புதல்வர்கள் யாரும் இல்லாததால், தனது அரிஞ்சய சோழனை பட்டத்து இளவரசனாக அறிவிக்கிறார்.. ஆனால் கடைசி காலத்தில் கண்டராதித்தருக்கு கடைசி காலத்தில் ஒரு ஆண் மகன் பிறக்கிறான்.. அவர் தான் உத்தம சோழன்..

ஆனால் அரிஞ்சயன் இளவரசனாக அறிவிக்கப்பட்டதால், கண்டராதித்தர் மறைவுக்குப் பின் அரிஞ்சய சோழன் ஆட்சிப் பொறுப்பேற்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற கொஞ்ச நாட்களிலே அரிஞ்சய சோழன் இறந்து விடுகிறார். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய உத்தம சோழன் சிறு குழந்தை என்பதால் அவருக்கு பதிலாக அரிஞ்சய சோழன் மகனாகிய சுந்தர சோழன் பதவியேற்கிறார். அதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் சுந்தர சோழன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் கட்டியவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

அரச மரபுப்படி இளவரசர் பதவி தனக்கே உரியது என்று எண்ணும் உத்தம சோழன், பாண்டிய நாட்டின் ஆபத்துவிகள் மற்றும் சிற்றரசர்களுடன் இணைந்து ஆதித்தனை கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சோழர்களை பற்றி பல நூல்கள் எழுதிய நீலகண்ட சாஸ்திரிகள் உத்தமனே கொலைக்கு காரணம் எனக் கூறுகிறார். உத்தம சோழன் ஆட்சி செய்த 16ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே.

மேலும் உத்தம சோழனின் ஆட்சியில் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.. ராஜராஜ சோழன் மன்னரான பிறகே, ரவிதாஸன் உள்ளிட்ட கொலையாளிகளை நாடு கடத்த வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் தண்டனை கொடுத்தாக உடையார்குடி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், ராஜராஜ சோழனும், குந்தவையும் சேர்ந்து செய்த கூட்டுசதியால் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதாக ஒரு சிலர் கூறுவதுண்டு.. வீராதி வீரனான ஆதித்த கரிகாலன், போரில் பெற்ற செல்வங்களில் ஒரு துளியைக் கூட கரிகாலன் தஞ்சைக்கு அனுப்பவில்லை. அவன் தனி அரசன் போலவே செயல்பட்டான் எனக் கூறப்படுகிறது.. இது சோழ ராஜ்ஜியத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற குந்தவைக்கு பிடிக்கவில்லை.. மேலும் தன் இளைய தம்பி ராஜ ராஜ சோழன் மூலமே சோழ பேரரசு உயர்ந்த நிலையை எட்டும் என்று குந்தவை நம்பினாள்..எனவே குந்தவையுடன் சதி செய்து ராஜராஜ சோழன் ஆதித்த கரிகாலனை கொன்றதாக கூறப்படுகிறது.. ஆனால் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை..

மேலும், உத்தம சோழனுக்கு எந்த விதத்திலும் இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு ராஜராஜ சோழனின் ஆட்சியில் தான் கண்டுபிடிக்க இயன்றது என்றும் கொலையாளிகள் பிராமணர்கள் தான் என்றும் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

உடையார்குடி கல்வெட்டின் படி, பாண்டிய நாட்டை சேர்ந்த ரவிதாசன் உள்ளிட்டோர் கொலை செய்திருக்கலாம் என்பதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன.. எனினும் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற கேள்விக்கு, இன்றுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.. சோழ வரலாற்றில் நிகழ்ந்த மர்மமான இந்த கொலை 1000 ஆண்டுகளை கடந்தும் புரியாத புதிராகவே தொடர்கிறது..

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே