மகாராஷ்டிரா அரசியலில், திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய அஜித் பவாரின் அரசியல்  பயணம் குறித்து தற்போது பார்ப்போம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் ஆனந்த் பவாரின் மகனாக 1959-ம் ஆண்டு பிறந்தார் அஜித் பவார். தந்தை மறைந்ததும் சரத் பாவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 

1982-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த அஜித் பவார் அதே ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

அதன்பின் புனே கூட்டுறவு வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அஜித் பவார், 1991-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரமதி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

அதே காலகட்டத்தில் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் சரத் பவார்.

எம்.பி.யாக இல்லாத சரத் பவார் போட்டியிட ஏதுவாக பாரமதி தொகுதி எம்.பி.பதவியை விட்டு கொடுத்தார் அஜித் பவார். 

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தபின் 1995 முதல் 2014-ம் ஆண்டு வரை 5 முறை பாரமதி தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.

1999-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநில அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அஜித் பவார், 2014ம் ஆண்டு வரை நீர்பாசன மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இடையில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நீர்பாசனத்துறையில் ஊழல் நடைபெற்றதாக அஜித் பாவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் 2012-ம் ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஆனால் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.  

மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்ததாக அஜித் பவார் மற்றும் சரத் பவார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டில் இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திடீர் திருப்பமாக அம்மாநில துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே