தமிழகத்தின் மற்றுமொரு சாதனையாக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செப்டம்பர் 15 அன்று செயல்பாட்டுக்குவருகிறது. முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,545 பள்ளிகளில் 1,14,095 தொடக்கப் பள்ளிச் சிறார்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சில மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், அத்திட்டத்தில் பால், ஒரு சில பழங்கள், ரொட்டி ஆகியவை மட்டுமே வழங்கப்படுகின்றன; மேலும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சில இடங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகம் முன்னோடி: 

சிறார்கள் பசியின்றிப் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வதோடு, ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதையும், ரத்தசோகையை நீக்குவதையும் இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் ‘ஊட்டச்சத்துச் சமமின்மை’யைப் போக்கும் விதமாக, வாரம் ஐந்து நாட்களும் சமைக்கப்பட்ட உணவு வழங்கும் வழிகாட்டுதலையும் அரசு தந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. காலை உணவுத் திட்டத்துக்கு முதற்கட்டமாக, ரூ.33.56 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாகப் ‘பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்ட’த்தை அறிமுகப்படுத்தினாலும், நிதிச் சுமையைக் காரணம்காட்டி மத்திய நிதி அமைச்சகம் இந்தப் பரிந்துரையை நிராகரித்துவிட்டது.

ஆனால், தமிழக அரசு பல்வேறு நிதிச் சுமைகளையும் தாண்டி, சொந்த நிதியின் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. முதல் ஓராண்டுக்கு இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு நிதி வழங்கி, ஆய்வுசெய்து தரும் அறிக்கைகள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாய் அமையும். முன்னர், தமிழகத்தின் அனுபவம்தான் நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர அடிப்படையாக அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகள் அவசியம்: 

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் தொடர்பான ஆய்வுகள், தரவுகள் இவற்றின் அடிப்படையில்தான், வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பரிசீலனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பட்டியலைக் குழந்தைகள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர், அவற்றைச் சமைப்பதற்கான பொருட்களைப் பெறுவதில் உள்ள நடைமுறைகள்-சிக்கல்கள், ஆங்காங்கே கிடைக்கும் சிறுதானியங்களைப் பயன்படுத்தும் முறைகள் எனத் தொடர்புடைய ஆய்வுகள் அமையும்.

காலை உணவைத் தயாரித்துப் பரிமாறும் பொறுப்பு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தரப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தைச் சமூக நலத் துறை செயல்படுத்தும்போது, காலை உணவுத் திட்டம் பள்ளி அளவில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான ஆய்வறிக்கை அவசியமாகிறது; காலை உணவுத் திட்டம் எவ்வாறு உள்ளூர் அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது கிராம வார்டு அளவில் செயல்படும் விவசாய மகளிர் உற்பத்திக் குழுக்களுடன் (ஒரு சில இடங்களில்) ஒன்றிணைந்து காய்கறி, சிறுதானிய வகைகளைப் பெற்று காலை உணவுத் திட்டத்தில் சேர்க்க இவை வழிவகுக்கும்.

எந்தெந்த வகைகளில், எந்தெந்த நேரத்தில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் வெளியிடப்பட வேண்டும். எனவே, அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள், தரவுகள் திரட்டும் முறையை வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய முடியும்.

வேண்டும் ஊட்டச்சத்து: 

பள்ளியில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதை உறுதிசெய்வது அவசியம். தமிழகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 27.1% பேர் வளர்ச்சிக் குறைபாடு (வயதிற்கேற்ற உயரமின்மை) உடையவர்கள் என்றும், 57.4% குழந்தைகள் ரத்தசோகை உடையவர்களாக உள்ளனர் என்றும் தேசியக் குடும்பநல ஆய்வு-5 தெரிவிக்கிறது.

அனைத்துப் பொருளாதார வகுப்புப் பிரிவுகளிடமும் ஊட்டச்சத்துச் சமமின்மை இருப்பதாகப் பல்வேறு காலகட்டங்களில், தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கிட்டத்தட்ட பாதியளவு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. ஆக, பள்ளி செல்லும் சிறார்களில் பாதியளவினரே அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளனர்.

எனவே, பள்ளி மாணவ – மாணவியரிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க வேண்டுமெனில், சத்துமிக்க உணவு அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அப்படியெனில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் சிறார்களும் ஊட்டச்சத்துமிக்க உணவு பெறுவதை உறுதிப்படுத்தும் வழி குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

பல்வேறு பள்ளிகளிலும் பயிலும் மாணவ – மாணவியருக்கு முறைப்படுத்தப்பட்ட ஒரே கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குடன் தமிழகத்தில் சமச்சீர்க் கல்வி கொண்டுவரப்பட்டது.

அதேபோல், சில தனியார் கல்லூரிகள் (விடுதியில் தங்கும், தங்காத) மாணவர்கள் கல்லூரிகளிலேயே மதிய உணவை உண்ணும் வகையில் இயங்குகின்றன. இந்த இரண்டு நிகழ்வுகளும் தனியார் பள்ளிகளிலும் ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.

அதை ஆங்காங்கே மையப்படுத்தப்பட்ட சமையலறையின் மூலமாகவும் சாத்தியப்படுத்தலாம். ஆனால், உணவு அட்டவணை என்பது, அரசின் மூலம் தரப்பட்டதாகவே அமைய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களோடு, நிதியாதாரங்கள் பெறுவதற்கான வழிமுறை என்ன என்பதைப் பற்றிய கலந்துரையாடல் இங்கு அவசியமாகிறது.

எனவே, ஊட்டச்சத்து சமமாகக் கிடைக்கும் வருங்காலச் சந்ததியினரைப் பெற அனைத்து வழிகளிலும் பள்ளி மாணவ – மாணவியர் சத்தான காலை உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்துவது அவசியம். இந்த அனுபவம் பிற மாநிலங்களுக்கும் பயன்தரும் வகையில் தரமான ஆய்வு, தரவுகள் திரட்டப்பட வேண்டியதும் மிக அவசியம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே