ஆசிரியர்கள் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை : நிர்மலா சீதாராமன்

நற்குணங்கள் கற்றுத் தருபவர்கள் அனைவருமே ஆசிரியர்கள் தான் எனவும் அது மதகுருக்கள் ஆகவும் இருக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த நேர்மையின் பயணம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்புத்தகத்தை வெளியிட கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சதாசிவம் அதனை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்க்கையில் கடினமான போராட்டங்களை எதிர்கொண்டாலும், நேர்மையை தவறாதவர் பாலகுருசாமி எனவும், அவரது முயற்சிகளால் தான் அண்ணா பல்கலைக்கழகம் சீர்மிகு பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் தொடர் தோல்விகள் வந்து கொண்டே இருந்தாலும் முயற்சியை மட்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து பயணித்தால் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.

ஆசிரியர்கள் தினம் என்ற ஒன்றை கொண்டாட வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், நம்முடன் வாழ்கையில் பயணித்த ஏதேனும் ஒரு ஆசிரியருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினாலே போதுமானது எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை எழுதிய ப.கிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே