இந்திய பொருளாதாரம்: ஜிடிபி என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்திய அரசு அறிவிக்க உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வந்தாலும் தற்போது அறிவிக்கப்படவுள்ள தரவுகள் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் மோசமானதாக இருக்கக்கூடும்.

அதற்கு காரணம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்காக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு இந்தியா முழுவதும் முடக்கநிலை அமல் படுத்தப்பட்டிருந்தது.

உணவு உற்பத்தி மற்றும் அடிப்படைத் தேவைகளை தவிர வேறு எந்த விதமான பொருளாதார நடவடிக்கைகளும் இந்த காலகட்டத்தில் நடைபெறவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பின்பு பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்பதால் இந்த ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்த தரவுகள் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒட்டு மொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுகிறது.

“ஜிடிபி என்பது ஒரு மாணவரின் மதிப்பெண் சான்றிதழை போன்றது,” என்கிறார் கேர் ரேட்டிங்ஸ் அமைப்பின் பொருளாதார வல்லுநர் சுசாந்த் ஹெக்டே.

ஒரு மதிப்பெண் சான்றிதழ் ஒரு மாணவர் எந்த பாடத்தைப் பயில்வதில் நன்றாக செயல்பட்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதைப்போலவே ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தெந்த துறைகள் மூலம் பெறப்பட்டுள்ளன என்பதை ஜிடிபி தரவுகள் தெரிவிக்கும்.

இந்தியாவின் மத்திய புள்ளியியல் அலுவலகம் ஒரு காலாண்டுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு நான்கு முறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும். இது மட்டுமில்லாமல் வருடாந்திர தரவுகளும் ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியும் அதிகரிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாடு எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரதிபலிக்கும்.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும்.

முதலாவது நுகர்வுச் செலவு. இது சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை வாங்க தனிநபர்கள் செலவு செய்த மொத்த தொகை.

இரண்டாவது அரசின் செலவுகள். மூன்றாவது முதலீட்டுச் செலவு. இது ஆலைகள் நிறுவுதல், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக செலவிடப்பட்ட தொகை.

நான்காவது நிகர ஏற்றுமதி. அதாவது ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையே உள்ள வேறுபாட்டின் மதிப்பு.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி முக மதிப்பு (nominal value) மற்றும் உண்மை மதிப்பு (real value) என்ன இரண்டு வழிகளில் அளவிடப்படும்.

நடப்பு நிதியாண்டில் விலை நிலவரத்தின்படி ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகளின் மதிப்பு ஜிடிபியின் முக மதிப்பு எனப்படும்.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டை அடிப்படை ஆண்டாகக் வைத்து கணக்கிடப்படும். தற்போதைய முக மதிப்பு அந்த அடிப்படை ஆண்டில் நிலவிய விலைவாசி நிலவரத்திற்கு ஏற்ப, பணவீக்கத்தின் காரணமாக அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

இதுவே ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மை மதிப்பு என்று கூறப்படுகிறது/

இந்த உண்மை மதிப்பே ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட சரியான முறை என்று கருதப்படுகிறது.

வேளாண்மை, உற்பத்தித் துறை, மின்சாரம், எரிபொருள் விநியோகம், கனிமம், சுரங்கம். காடுகள் மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய எட்டு உற்பத்தி துறைகள் மற்றும் வர்த்தகம், தகவல்தொடர்பு, நிதி, காப்பீடு, விற்பனைத் துறை, சமூக மற்றும் பொது சேவைகள் ஆகிய சேவைத் துறைகளில் இருந்து ஜிடிபி தரவுகள் சேகரிக்கப்படும்.

ஜிடிபி ஏன் முக்கியமானது?

அரசு மற்றும் தனி நபர்கள் முடிவெடுப்பதில் ஒரு முக்கியமான குறியீடாக ஜிடிபி தரவுகள் இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது என்றால் அந்த நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சரியாக செயல்படுகின்றன என்றும் அரசின் திட்டங்கள் அடிமட்டம் வரையில் சென்று சரியான திசையில் பயணிக்கின்றன என்றும் பொருள்.

இதுவே ஜிடிபி வளர்ச்சியடையாமல் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக உள்ளது என்றால் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பொருள்.

அதுமட்டுமல்லாமல் தொழில்துறையினர், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என பலரும் முடிவெடுப்பதில் ஜிடிபி தரவுகளை பயன்படுத்துகின்றனர்.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடையும் சமயத்தில் உற்பத்திக்காக முதலீட்டாளர்கள் அதிக பணத்தை முதலீடு செய்வார்கள்.

இதுவே ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் சமயத்தில் செலவுகள் மற்றும் முதலீடுகள் குறையும்.

இதன்காரணமாக பொருளாதார வளர்ச்சியும் சரிவடையும்.

இத்தகைய சூழ்நிலையில்தான் தொழில் துறையினர் மற்றும் மக்களுக்காக நிவாரணம் வழங்க அரசு அதிகமாக செலவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அரசு வழங்கும் தொகையின் மூலம் தனிநபர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்கள் செலவுகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு விடுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் அரசின் எதிர்கால திட்டங்களை வகுப்பதிலும் ஜிடிபி தரவுகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஜிடிபி முழுமையான கண்ணோட்டம் தருமா?

பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள ஜிடிபி உதவினாலும் இதுவே எல்லாம் என்று கூறிவிட முடியாது.

அமைப்புசாரா துறையில் நிலவும் சூழலை ஜிடிபி தரவுகள் பிரதிபலிப்பதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் 94 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கும் அமைப்புசாரா தொழில்துறையை ஜிடிபி தரவுகள் உள்ளடக்கவில்லை என்கிறார் மூத்த பொருளாதார வல்லுநரான பேராசிரியர் அருண்குமார்.

“ஜிடிபி வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக இருக்கிறது என்றால் முறைசார் துறைகளைவிட அமைப்புசாரா துறைகள் மிகவும் மோசமான சூழலில் உள்ளன என்று பொருள்,” என்கிறார் அவர்.

அதாவது ஜிடிபியில் சரிவு 10 முதல் 15 சதவிகிதம் இருக்கிறது என்றால் அமைப்புசாரா தொழில்துறையில் 20 முதல் 30 சதவீத வீழ்ச்சி உள்ளது என்றே பொருள்.

முறைசார் துறைகள் எந்த மாதிரியாக செயல்படுகின்றன என்பதை ஜிடிபி தரவுகள் பிரதிபலிக்கும்.

ஆனால் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் பணியாற்றும் அமைப்புசாரா துறையின் தரவுகளை ஜிடிபி முற்றிலும் பிரதிபலிப்பதில்லை.

2021-22ஆவது நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 4 முதல் 15 சதவீதம் வரை சுருங்கும் என்று பல்வேறு பொருளாதார கணக்கீட்டு அமைப்புகளும் வல்லுநர்களும் கூறுகிறார்கள்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். ஆனால் ஜிடிபி மதிப்பு எந்த அளவு குறையும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

இந்திய பொருளாதாரம் ஏற்கனவே கடந்த நான்கு நிதி ஆண்டுகளாக சரிவடைந்து வருகிறது.

2016 – 17 இல் 8.3 சதவீதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி விகிதம், 2017-18இல் 7 சதவீதமாகவும், 2018-19இல் 6.1 சதவீதமாகவும், 2019-20இல் 4.2 சதவிகிதமாகவும் இருந்தது.

“வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத சூழலில், கொரோனா வைரஸால் உண்டாகும் நெருக்கடிநிலை பிரச்சனைகளை மேலும் பெரிதாக்குகிறது. வருமானம் மற்றும் வாழ்க்கை தரம் மேம்பாட்டில் தேக்க நிலையை சந்திக்கும் அபாயத்தில் இந்தியா உள்ளது,” என்கிறது மெக்கென்சி நிறுவனத்தின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று.

கொரோனால் சரிந்த தனது பொருளாதாரத்தை மீள் கட்டமைக்க, பிற ஆசிய நாடுகளைவிட இந்தியாவுக்கு அதிக காலம் தேவைப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

News Source : BBC Tamil


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 398 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே