நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் WRITE OFF செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைட் ஆப் என்பது என்ன? இதன் பின்னணி பற்றிப் பேசுகிறது இந்தத் தொகுப்பு.

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, திரும்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, இவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன், தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதாவது, இந்த 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் என்பது வங்கிகளின் வரவு செலவுக் கணக்கில், வாராக்கடனால் ஏற்பட்ட நஷ்டமாக பதிவு செய்யப்படும்.

அதே சமயம், இந்த கடனை திரும்ப பெறும் நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.

பொதுவாக திரும்ப வசூல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாத கடன்கள் தான் இந்த WRITE OFF வகையில் சேர்க்கப்படும்.

இதன்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பட்டியலில், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கு கொடுத்த கடனில், ஆயிரத்து 943 கோடியும், மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த கடனில் 5 ஆயிரத்து 492 கோடி ரூபாயும் நஷ்டமடைந்திருப்பதாக வங்கிகளின் வரவு செலவு கணக்கில் கணக்கு காட்டப்படும்.

மேலும் பதஞ்சலி நிறுவனத்திற்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தின் கடன் 2 ஆயிரத்து 212 கோடியும் , ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் பெற்ற 2 ஆயிரத்து 850 கோடி ரூபாயும் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டமாக கணக்கில் காட்டப்படும்.

இது போல், மொத்தம் 50 பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே