அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு என்ன ரேட்டிங்? ஐசிசி வெளியீடு

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதலாவது டி20 போட்டி ஆகியவற்றுக்கான ரேட்டிங்கை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பகலிரவு மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி இரு இன்னிங்ஸிலும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. 2 நாட்களுக்குள் ஆட்டம் முடிந்து இந்திய அணி 10 விக்கெட்டில் வென்றது.

அகமதாபாத் ஆடுகளம் தரமற்றது, டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் அல்ல என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள், முன்னாள் இந்திய வீரர்கள் பலர் குற்றம் சாட்டினர். ஆனால், ஆடுகளம் குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது.

ஆனால், 4-வது டெஸ்ட் போட்டிக்கு இதே ஆடுகளம்தான் பயன்படுத்தப்பட்டது என்றாலும், 3-வது டெஸ்ட் போட்டி ஆடுகளத்தைவிட பேட்டிங், பந்துவீச்சுக்கு ஓரளவுக்கு ஒத்துழைத்தது.

தற்போது இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், அகமதாபாத்தில்தான் நடந்து வருகிறது.

இந்நிலையில், அகமதாபாத் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரேட்டிங் வழங்கியுள்ளது. ஆடுகளம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் விதிமுறைகள் என்ன, தரம் ஆகியைகுறித்து ஐசிசி சில வரையறைகள் வைத்துள்ளது. அந்த அடிப்படையில் ஆடுகளத்துக்கு ரேட்டிங் மதிப்பிடப்படுகிறது.

இதன்படி, 3-வது டெஸ்ட் போட்டி அதாவது பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்தபோது, இருந்த ஆடுகளம் ” சுமார்(சராசரி)” ரேட்டிங் மட்டுமே ஐசிசி வழங்கியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளத்துக்கு ” குட்” என்று ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடந்த ஆடுகளம் ” வெரி குட்” என ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி நடந்த முடிந்ததும் ஐசிசி சார்பில் அதிகாரிகள் ஆடுகளத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். ஆடுகளம், மைதானம் ஆகியவை தரக்குறைவாக இருந்தால், அல்லது பராமரிப்புக் குறைவாக இருந்தாலோ போட்டி நடத்தும் நிர்வாகத்திடம் ஐசிசி சார்பில் விளக்கம் கேட்கப்படும். அதன் அடிப்படையில் ஆடுகளம் மோசமானது அல்லது, விளையாடத் தகுதியற்றது என்று ரேட்டிங் வழங்கப்படும், சில நேரங்களில் போட்டி நடத்தத் தடையும் கூட விதிக்கப்படலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே