இலங்கையை கதறடித்த ஃபேபியன் ஆலனின் 3 சிக்சர்கள்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

கூலிட்ஜில் நடைபெற்ற இந்த கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் ஸ்கோர் 131 ரன்களைத் தாண்ட முடியவில்லை. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 134/7 என்று வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸில் பயணம் மேற்கொண்டு ஆடிவரும் இலங்கை அணியை மே.இ.தீவுகள் 3வது டி20-யில் வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றி கோப்பையை வென்றது.

கூலிட்ஜில் நடைபெற்ற இந்த கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் ஸ்கோர் 131 ரன்களைத் தாண்ட முடியவில்லை. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 134/7 என்று வெற்றி பெற்றது.

19-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலன் 3 மிகப்பெரிய சிக்சர்களை ஸ்டாண்டுக்குள் சொருகினார்.

132 ரன்கள் இலக்கை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை விரட்டும் போது ஸ்பின்னர்கள் சண்டகன் (3/29), டிசில்வா (2/13) என்று அசத்த இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் என்று 18வது ஓவரின் போது வந்தது. 18 பந்துகளில் இலங்கை வெற்றிக்கு 27 ரன்கள் தேவை.

ஜேசன் ஹோல்டர் 18வது ஓவரில் விக்கெட்டை இழக்காமல் காத்தார். அதே வேளையில் ஒரு ஃப்ரீ ஹிட் பந்தில் பெரிய சிக்சரை அடித்தார். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை. அப்போதுதான் அகிலா தனஞ்ஜயா ஓவரில் ஃபேபியன் ஆலன் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.

ஒன்று மற்றும் மூன்று மற்றும் கடைசி பந்துகளில் 3 மிகப்பெரிய சிக்சர்களை கொண்டு சொருகினார். இதனையடுத்து ஒரு ஓவர் மீதம் வைத்து வென்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

ஆலன் 6 பந்துகளில் 21 ரன்கள் எடுத்ததோடு முன்னதாக 4 ஓவர் 13 ரன்கள் ஒரு விக்கெட் என்று பவுலிங்கிலும் அசத்தினார். இதனையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தத் தொடரே ஒரு அறுவைதான், டி20 தொடர் ஒன்று மூன்று போட்டிகளிலுமே குறைந்த ஸ்கோராக இருந்தால் எப்படி அந்தத் தொடர் நல்ல தொடராக இருக்க முடியும்.

தொடர்ச்சியாக டாஸ் வென்ற இலங்கை இந்த முறையும் பேட் செய்தது, இந்த முறையும் டாப் ஆர்டர் கழன்று விட்டது. 10 ஓவர்களில் 46/4 என்று மடிந்தனர்.

பிறகு தினேஷ் சந்திமால் (54), ஆஷன் பந்தேரா (44) இணைந்து 63 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து 131 ரன்களுக்குக் கொண்டு வந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி லெண்டின் சிம்மன்ஸ் (26), எவின் லூயிஸ் (21) மூலம் நல்ல தொடக்கம் கண்டது. முதல் விக்கெட்டுக்காக 38 ரன்கள் சேர்த்தனர். இருவருமே ஹசரங்காவிடம் வீழ்ந்தனர். கேப்டன் பொலார்ட் டக் அவுட் ஆனார். கிறிஸ் கெய்ல் தேவையில்லாமல் ‘நான் அடிக்கப்போகிறேன் என்றா நினைத்தீர்கள்’ இல்லையே என்று கெக்கலி காட்டுவது போல் 20 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து காலியானார்.

நிகோலஸ் பூரன் 18 பந்துகளில் 23 என்று அதிரடி காட்டினார், ஆனால் இவரும் பொலார்ட் போலவே வேகப்பந்து வீச்சாளர் சமீராவிடம் வெளியேறினார். ரிஸ்ட் ஸ்பின்னர் சண்டகன், ரோவ்மன் போவெலை ஒற்றை இலக்க ஸ்கோரில் வெளியேற்றினார். அடுத்த பந்தே டிவைன் பிராவோவையும் டக் அவுட் செய்தார். ஆனால் பேபியன் ஆலன் இலங்கையின் வெற்றிக் கனவை தன் 3 அதிரடி சிக்சர்கள் மூலம் முறியடித்தார்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆண்டிகுவா சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் வியாழனன்று தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே