திண்டுக்கல் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

செம்பட்டி அருகே ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி திண்டுக்கல்லைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து சிறுவர்கள் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கொடைக்கானல் கீழ்மலை அடிவாரத்தில் ஆத்தூர் நீர்த் தேக்கம் உள்ளது.

பருவ மழையால் நீர்த்தக்கம் நிரம்பிக் காணப்படுவதால் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் சுற்றுப்புற கிராமம் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர்கள் அங்கு நீராடச் செல்வது வழக்கம்.

இன்றும் வழக்கம் போல் பலரும் நீர்த்தேக்கக் கரைகளில் ஆங்காங்கே நீராடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென ஒரு பகுதியில் இருந்து காப்பாற்றக் கோரி அடுத்தடுத்துக் குரல் எழுந்தது. இதைக் கேட்ட மற்ற பகுதிகளில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். 

அப்போது அடுத்தடுத்து இளைஞர்கள் நீரில் மூழ்கியது தெரிந்தது. நீரில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற முயன்ற அவர்களுடன் வந்தவர்களும் நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவர்களைத் தேடினர்.

ஒவ்வொரு உடலாக மீட்க, கரையில் இருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மொத்தம் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இறந்தவர்கள் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் (19), லோகநாதன் (19), செல்வபரணி(19) ஆகிய மூவரும் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளனர்.

பரத்(16) பத்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். கார்த்திக் பிரபாகரன் (19) திண்டுக்கல்லில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆத்தூர் நீர்த்தேக்கத்திற்கு நண்பர்கள் ஐந்துபேரும் குளிக்கசென்றது தெரியவந்தது.

நீச்சல் தெரியாது என்பதாலும், மணல் அள்ளியதால் ஆழமாக உள்ள பகுதிக்கு சென்றதாலும் இவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து ஐந்து பேரும் நீரில் மூழ்கி இறந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே