19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் ஏ பிரிவில் கலந்துகொண்டிருக்கும் இந்திய அணி தனது முதலாவது போட்டியில் இலங்கை அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் புலோயென்ஃபோண்டெயின் நகரில் இன்று புதுமுக அணியான ஜப்பானை, நடப்பு சாம்பியனான இந்தியா எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணி, பலம்வாய்ந்த இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் தடுமாறியது.
அந்த அணியின் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்னை எடுக்க முடியாமல் போனதுடன் அந்த அணியின் 5 வீரர்கள் தொடர்ச்சியாக டக் அவுட் ஆகி முழுமையாக இந்திய அணியிடன் சரணடைந்தனர்.
22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜப்பான் அணி மொத்தம் 41 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் எக்ஸ்டிரா வகையில் இந்திய அணி 19 ரன்களை விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 8 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார்.
கார்த்திக் தியாகி 3 விக்கெட்களையும், ஆகாஷ் சிங் 2 விக்கெட்களையும், பாட்டில் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
மிகவும் எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் குஷாகரா ஜோடி 4.5 ஓவர்களில் 42 ரன்களை எடுத்து ஜப்பானை வீழ்த்தியது.
45.1 ஓவர்கள் மிச்சம் வைத்து இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் இத்தொடரில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் ரவி பிஷ்னோய் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது. 3வது மற்றும் இறுதிப் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.