மேற்கு வங்கம், அசாமில் 69 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டி

தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாவும் தேர்தல் அறி விக்கப்பட்டது. இதில் அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடை பெற்றது. அசாமில் 47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்தித்தன.

இவ்விரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் இன்று தேர்தலை சந்திக்கின்றன.

மேற்கு வங்கத்தில் இன்று தேர் தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் மாநிலத்தின் பஷ்சிம் மெதினிபூர், கிழக்கு மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளன. 30 தொகுதிகளில் 8 தொகுதிகள் எஸ்சி சமூகத்தினருக்கான தனித் தொகுதிகள்.

30 தொகுதிகளிலும் 19 பெண்கள் உட்பட மொத்தம் 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மிக முக்கிய வேட்பாளரான முதல்வர் மம்தா, நந்திகிராமில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஒரு காலத்தில் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த டிசம்பரில் மம்தாவின் திரிணமூல் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தவிர இடதுசாரி வேட்பாளர் மீனாட்சி முகர்ஜியும் இங்கு களத்தில் உள்ளார்.

அசாமில் இன்று தேர்தலை சந்திக்கும் 39 தொகுதிகளில் 12 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான தனித்தொகுதி கள். 39 தொகுதிகளிலும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 345 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இவர்களில் 5 பேர் அமைச்சர்கள், ஒருவர் துணை சபாநாயகர் ஆவார்.

மொத்தம் 73,44,631 வாக் காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 37,34,537 பேர் ஆண்கள். 36,09,959 பேர் பெண்கள். 135 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

இரு மாநிலங்களிலும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும்கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது. இதுபோல் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் மே2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவு வெளியாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே