திரிணமூல் காங்கிரஸின் தீவிர பிரச்சாரத்தை முடக்கி வைக்க பாஜக செய்த உத்தி: ஐந்து நாட்களாக வேறுவழியின்றி நந்திகிராமில் தங்கிய முதல்வர் மம்தா

சட்டப்பேரவை தேர்தல்களில் ஆளும் கட்சியின் முதல்வர்கள் தாம் போட்டியிடும் தொகுதி களில் வழக்கமாக அதிக நாட்கள் தங்குவதில்லை. பெரும்பாலான வர்களுக்கு அங்கு எளிதாக வெல்லும் அளவிற்கு அவர்களது செல்வாக்கு இருக்கும்.

அவர்கள் தம் கட்சிக்காக மாநிலம் முழுவதிலும் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதாலும் தாம் போட்டியிடும் தொகுதிகளில் அதிக நாட்கள் தங்குவதில்லை. மேற்கு வங்கமாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இங்கு இன்று (1ம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல்நடைபெறுகிறது.

நந்திகிராமில் முதல்வர் மம்தாகடந்த ஞாயிறு முதல் 5 நாட்களாகத் தங்கியுள்ளார். இதில், அத்தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு நாள் தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். இதனால்,அவர் மேற்கு வங்க மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் செய்யவிருந்த பிரச்சாரம் பாதிக்கப்பட்டது. திரிணமூல் காங்கிரஸின் பிரச்சாரத்தை முடக்க இந்த நெருக்கடியை பாஜக திட்டமிட்டு உருவாக் கியதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய2 தேர்தல்களிலும் மம்தா, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்காக அவர் தலா ஒரே ஒரு பிரச்சாரக் கூட்டத்தை மட்டும் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். இந்த முறை தொகுதி மாறி நந்திகிராமில் போட்டியிடுபவருக்கு சூழல் அதுபோல் இல்லை. இங்கு பாஜகவின் உத்தியால் முதல்வர் மம்தாவிற்கு நந்திகிராமில் தங்கி இருக்க வேண்டிய நெருக்கடி உருவாகிவிட்டது.

நந்திகிராமில் பாஜக வேட் பாளராக சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸின் முக்கியத் தலைவரான இவர் தனது நாற்பதிற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பாஜகவில் முதல் தலைவராக இணைந்தவர். இவரது போட்டியால் மம்தாவின் வெற்றி நந்திகிராமில் சவாலாக அமைந்து விட்டது.

இதனிடையே, அத்தொகுதியின் தேர்தலில் குழப்பம் விளைவித்து வெல்ல பாஜக திட்டமிடுவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் மீது மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த திரிணமூல் காங்கிரஸ் நந்திகிராமில் வெளியாட்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. இதில், உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் மாநிலத்தை சேர்ந்த வெளியாட்கள் இடம் பெற்றதாகக் கூறி சந்தேகத்திற்கு இடமாக மூன்று பேரையும்பிடித்து போலீஸில் ஒப்படைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இவற்றை காரணம் காட்டிய முதல்வர் மம்தா, நந்திகிராமில் கடந்த 4 நாட்களாகத் தங்கியுள்ளார். இதில் கடைசி கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை 3 நாட்களாகச் செய்திருந்தார். தொடர்ந்து இதன் வாக்குப்பதிவு முடியும் வரையும்தான் நந்திகிராமில் தங்கியிருக்கப் போவதாகவும் நேற்று அறிவித்திருந்தார்.

கடந்த தேர்தல்களிலும்….

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் அம்மாநில முதல்வரான ஷீலா தீட்சித்தை எதிர்த்தார். இங்கு நிலவியக் கடும் போட்டியால் ஷீலா தனது தொகுதியில் அதிக நாட்கள் செலவிட வேண்டிவந்தது. பிறகு 2014 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளரான மோடியை கேஜ்ரிவால் எதிர்த்தார். இதனால், கேஜ்ரிவாலால் மற்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.

இந்த நிலை, 2019 மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் அமேதியில் மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் ஏற்பட்டது. இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் சவால் அளித்தார்.

பாஜகவின் பல மத்திய அமைச்சர்கள் அமேதியில் முகாமிட்டதால் ராகுலுக்கு அங்கு அதிக நாள் பிரச்சாரம் செய்ய வேண்டி வந்தது. இதில்அவரால் வெல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே