கடைசி வரை தேர்தல் அறிக்கை வெளியிடாத நாம் தமிழர் கட்சி: போதிய நிதி வசதி இல்லை என தகவல்

நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு (தேர்தல் அறிக்கை) கடைசி வரை வெளியிடப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. நாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு இலவச வாஷிங் மெஷின்,ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்பன உள்ளிட்ட 163 அறிவிப்புகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட 500 திட்டங்களுடன் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதுபோல, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்பது உள்ளிட்டவாக்குறுதிகளுடன் அமமுக தனது தேர்தல் அறிக்கையையும், வீட்டுக்கு ஒரு கணினி, இணையதள வசதியுடன் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கட்சிகள் அனைத்தும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக அறிவிக்கப்படும் என்பதுஉள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை சொல்லி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், அக்கட்சியின் ஆட்சிசெயற்பாட்டு வரைவு (தேர்தல் அறிக்கை) கடைசி வரை வெளியிடப்படவில்லை.

நிகழ்வு ஒத்திவைப்பு

நாம் தமிழர் கட்சியின் தேர்தல்அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர்அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “போதிய நிதி வசதி இல்லாததால் இத்தேர்தலில் எங்கள் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே