அமைச்சரின் சொந்த கிராமத்தில் பலத்தை காட்டிய அமமுக: அதிர்ச்சியில் அதிமுகவினர்

கிராமத்தில் அமமுக வேட்பாளர் அன்பரசன் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூட்டம் அலைமோதியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு இந்தமுறை அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை

அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப் பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவான கிராம மக்கள் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

மேலும் அமைச்சருக்கு ஆதரவான கிராமங்களில் அதிமுகவுக்கு வாக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சரை சேலத்துக்கு வரவழைத்து முதல்வர் பழனிசாமி சமரசப்படுத்தினார்.

பின்னர், ஓரளவு சமாதானம் ஆன அமைச்சர் ஜி.பாஸ்கரன், வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஆதரவாக சிவகங்கை தொகுதியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இருந்தபோதிலும் அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது சொந்த கிராமமான தமறாக்கியைச் சேர்ந்த மக்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பார்களா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமறாக்கிக்கு வாக்குச் சேகரிக்கச் சென்ற அமமுக வேட்பாளர் அன்பரசனுக்கு, அப்பகுதி மக்கள் சார்பில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கூட்டமும் அலைமோதியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே