மக்கள் எங்கள் பக்கம்… மகத்தான வெற்றி நிச்சயம்!- முதல்வர் கே.பழனிசாமி பேட்டி

ஜெயலலிதா என்கிற பிரம்மாண்டமான ஆளுமையின் மறைவுக்குப் பிறகு, கட்சியிலும் ஆட்சியிலும் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக அத்தனை பேரும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், பல்வேறு கலகங்கள் – குழப்பங்களுக்கு இடையே தமிழகத்தின் முதல்வராக பிப்ரவரி 2017-ல் பதவி ஏற்றுக்கொண்டார் எடப்பாடி கே.பழனிசாமி. கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அலைவீசும் சவால்களைச் சமாளித்து எப்படி இவர் கரையேறப்போகிறார் என்று ஒட்டுமொத்த அரசியல் உலகமும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, ‘நாற்காலியில் இவர் எத்தனை நாட்கள் உட்காரப்போகிறார், பார்ப்போம்’ என்று சவால்விட்டு, நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்தது எதிர்க்கட்சி வரிசை! நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகி, நான்காண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, புதிய தேர்தலைச் சந்திக்கிறார் எடப்பாடி கே.பழனிசாமி.

பொறுமை, விசுவாசம், பணிவு, உழைப்பு, அனுபவம், தந்திரம் என்ற குணாதிசயங்களுடன் தன் ஆட்சியை இத்தனை காலம் இவர் காப்பாற்றிக்கொண்டதற்குப் பின்னணியில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், குடும்பத்தில் முதல் தலைமுறை அரசியலரான இவர், இத்தனை தூரம் வெற்றிகரமாகக் கடந்துவந்த வகையில், தமிழகம் இதுவரை கண்ட முக்கியமான ஆளுமைகளில் இவரும் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னம்பிக்கை, வேகம், விவேகத்துடன் தேர்தல் களமிறங்கிய அவர், ஓய்வின்றிச் சுற்றிச் சுழன்றதில் கட்சியினர் மனமுவந்து கொண்டாடும் தலைவராகியிருப்பதைக் காண முடிகிறது. மக்களிடமும் அவர் பரிச்சயமாகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இறுதிநாள் பிரச்சாரம் முடியும் வரையிலும் இடைவிடாது தமிழகத்தின் அத்தனை மூலைகளுக்கும் ஓடிக்கொண்டே இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் முன்வைத்த அத்தனை கேள்விகளுக்கும் பதில்களை அள்ளிப்போட்டார். ஆழமாக யோசித்துவிட்டு, வெளிப்படுத்தும் வார்த்தைகளில் நிதானம், கண்ணியக் குறைவாக யாரைப் பற்றியும் சொல்லிவிடக் கூடாது என்பதில் காட்டும் கவனம் என அச்சில் பதித்தாற்போல் அமைகின்றன அவரது வார்த்தைகள்!

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக முதல்வராகவும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறீர்கள். அதிமுகவில் நீங்கள் எப்போது ஐக்கியமானீர்கள்? உங்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். இளம் வயதிலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகன். அவரின் உழைப்பு, சுயமரியாதை, பெண் விடுதலை, சமத்துவம், நல்லொழுக்கம் போன்ற புரட்சிகரமான சிந்தனைகளால் கவரப்பட்டேன். அரசியலில் நான் இணைந்தது 1974-ம் ஆண்டு. எம்ஜிஆரின் ரசிகன் என்ற முறையில் அவருடைய பாதையில் நான் பயணம் செய்வது இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வு.

முதலமைச்சரான பிறகு உங்கள் தினசரி வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள்…?

என்னைப் போன்ற விவசாயிக்கு, விடியலுக்கு முன்னரே பணிகள் தொடங்கிவிடும். உழைப்பது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. விதைப்பதும், விளைச்சலைக் கண்டு மகிழ்வதும், அதை அறுவடை செய்வதும், அறுவடை செய்தவற்றைப் பலருக்குப் பகிர்ந்தளிப்பதும், பசி போக்குவதும், விவசாயத்தில் நாங்கள் காண்கின்ற மனமகிழ்ச்சி. இன்றும் காலை எழுந்தவுடன் இறை வணக்கம் செய்வது என் வழக்கம். பிறகு, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வேன். அதைத் தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளுக்கான முன் ஏற்பாடு, கட்சியினருடன் உரையாடல், அதிகாரிகளுடன் ஆலோசனை, அலுவலகப் பணிகள், கட்சிப் பணிகள் என்று தொடரும்.

தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுவதாகச் சிலர் கூறுகின்றனர். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

உலகில் வெற்றிடம் என்று ஒன்று இருப்பதில்லை. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது பெளதீகம். காலச்சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும். அரசியலிலும் அதுபோலத்தான். ஒவ்வொரு சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப மனிதர்கள் தோன்றுவதும் உருமாறுவதும் இயற்கையே. எனவே வெற்றிடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மத்திய அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். வெளிப்படையாகச் சொல்லுங்கள்… அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமை அரசா?

அடிமை அரசு என்று உண்மைக்குப் புறம்பாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியல் அமைப்பில் மத்திய, மாநில, ஒன்றியப் பிரதேச அரசுகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது. மாநில உரிமையை நாங்கள் என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை. 40 வருடப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டோம்; நாடாளுமன்றக் கூட்டத் தொடரையே நடத்தவிடாமல் எங்கள் எம்பிக்கள் போராடியதன் மூலமாகவே காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுடன் எங்கள் அரசு உற்ற தோழனாக இருப்பதால்தான், எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றோம். அதேபோல், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தில் மத்திய அரசு முழுக் கவனம் செலுத்துகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தபோது, இருந்த பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவும், மத்தியில் புதிய பதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் திமுகதான் காங்கிரஸின் அக்மார்க் அடிமையாக இருந்தது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, கச்சத் தீவைத் தாரைவார்த்தது, காவிரி உரிமையை விட்டுக்கொடுத்தது, இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது, அதை மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது, ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவு அளித்தது, காளையைக் காட்டு விலங்குகள் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய வித்திட்டது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போது கூறுங்கள்… யார் அடிமைகள்? யார் மாநிலத்துக்கு அதிக நன்மையைப் பெற்றுத்தந்தவர்கள்? எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்.

தற்போது ஏராளமான கருத்துக் கணிப்புகள் வெளியாகிவருகின்றன. இதில் பெரும்பாலானவை திமுக பெரும் வெற்றி பெறும் என்றே கூறுகின்றன. இந்தக் கருத்துக் கணிப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அம்மா இருந்தபோதே இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் பொய்த்துப்போனதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதனால் நாங்களும் கணிப்புகளைப் பொருட்படுத்துவதில்லை. சில கருத்துக் கணிப்புகள் எங்களுக்குச் சாதகமாகவும், வேறு சில கருத்துக் கணிப்புகள் எதிர் அணிக்குச் சாதகமாகவும் சொல்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்புகளால் யாருக்கு என்ன பயன்? சோப்பு, காபித்தூள் போன்று நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார, விளம்பரத் தந்திரமா அரசியலும் தேர்தலும்? 2016 சட்டமன்றத் தேர்தலில், நான் எடப்பாடியில் தோல்வி அடைவேன் என்றும், சேலம் சுற்றுவட்டாரத்திலுள்ள 11 தொகுதிகளில் அதிமுக 4-ல் மட்டுமே வெற்றிபெறும் என்றும் பிரபலமான ஒரு தொலைக்காட்சிக் கருத்துக் கணிப்பு வெளியிட்டது. ஆனால், நான்தான் சேலம் மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். மேலும், 11-ல் 10 தொகுதிகளை வென்றோம். எனவே, மக்கள் தீர்ப்பைக் கண்டறியும் சக்தி, எல்லாக் காலங்களிலும் கணிப்புகளுக்கு இருந்ததில்லை. மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற கணிப்புகளால் நானும் கட்சியினரும் சோர்ந்து போகவில்லை. மாறாக, கூடுதலாக உழைக்க முடிந்தது. மக்களைச் சந்தித்து நாங்கள் செய்த நன்மைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடிந்தது.

அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கு அரசு கஜானாவில் போதிய நிதி இருப்பதாகத் தெரியவில்லையே?

அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது பல ஆய்வுகளுக்குப் பின் தயாரான ஒன்று. கடந்த காலங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். மக்களுக்குப் பயன்படும் திட்டத்தைச் செயல்படுத்த நல்ல மனதும், செயல்படத் தேவையான உத்வேகமும் இருந்தால் இது சாத்தியமே. பொருளாதார அறிஞர்களைக் கேட்டுப்பாருங்கள். அவர்களே இதை ஒப்புக்கொள்வார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கான வழிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே, ஏழை, எளிய மக்களுக்குத் தொண்டுசெய்யும் நல்ல மனதுடைய நாங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

கட்சி, ஆட்சி எது பெரியது? முதல்வர், ஒருங்கிணைப்பாளர்… இவை இரண்டில் எந்தப் பதவி அதிக செல்வாக்கு, அதிகாரம் கொண்டது? உங்களுடைய பார்வையைச் சொல்லுங்களேன்…

கட்சி என்பது உயிர். ஆட்சி என்பது உயிரால் உந்தப்பட்டு செயல்படும் உடல் சக்தி. அரசியல் என்பது இரண்டையும் உள்ளடக்கியது. அதிகாரம், செல்வாக்கு என்ற சொற்கள் எல்லாம் உண்மையான மக்கள் தொண்டனுக்கு ஒரு பொருட்டே அல்ல.

கரோனா தொற்று கடுமையாக இருந்த காலகட்டத்தில், ஒரு முதல்வராக உங்கள் செயல்பாடுகளுக்கு என்ன மதிப்பெண் கொடுப்பீர்கள்?

மதிப்பெண் கொடுக்கத்தான் மக்கள் இருக்கிறார்களே! ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன், எனக்கு என் பாதுகாப்பைவிடவும் தமிழ்நாட்டு மக்களின் உயிர்தான் மிகவும் முக்கியம். அதனால், ஒவ்வொரு மாவட்டமாக நானே நேரில் சென்று ஆய்வுசெய்து, அதிகாரிகளுடனும் எங்கள் அமைச்சர்களுடனும் சேர்ந்து கள நிலவரத்தை நன்கு ஆய்வு செய்தேன். என்னென்ன பணிகளில் தொய்வு இருக்கிறதோ அவற்றை எல்லாம் முடுக்கிவிட்டு, எல்லோரும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உரிய ஆலோசனையும் அனுமதியும் அளித்தேன். மருத்துவக் குழு, சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறை மற்றும் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள்… இவர்களுடன் எங்கள் கட்சியினரும் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் சுழன்றதைக் கண்டு, மக்களோடு சேர்ந்து நானும் மிக நெகிழ்ந்துபோனேன்.

பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அதிமுக மீது மக்களுக்கு சலிப்புத்தட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில், மின்வெட்டு இல்லை, கட்டப்பஞ்சாயத்து இல்லை, அராஜகமும் ரெளடித்தனமும் இல்லை, நில அபகரிப்பு இல்லை. குடும்ப அதிகார மையங்கள் எதுவும் இல்லை; சட்டம் – ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறைகூட சுதந்திரமாக, நிம்மதியாகச் செயல்படுகிறது. அனைத்துத் தரப்பினரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்கள். நேர்மையுடனும், கடமை உணர்ச்சியுடனும், தங்கள் மனமறிந்து செயல்படும் அரசை மக்கள் நம்புகிறார்கள். எனவே, இத்தகைய சிறப்பான, பண்பட்ட ஆட்சியே தொடர வேண்டும் என்று உறுதிபூண்டு, மக்கள் எங்களையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த முறை த.மா.கா-வையும் சேர்த்து 191 தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னம் களம் காண்கிறது. அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

எங்கள் வெற்றி பெரும்பான்மையாகவே இருக்கும். கிராமங்களின் நம்பிக்கைச் சின்னம் இரட்டை இலை. எம்ஜிஆர், அம்மா… அடுத்து நாங்களும் சொன்னதைச் செய்து மக்களின் நம்பிக்கைக்குரிய ஆட்சியாளர்களாகவே இருந்துவந்திருக்கிறோம். இரட்டை இலைச் சின்னமும், அண்ணா உருவத்துடன் கூடிய கழகக் கொடியும் இருக்கும்வரை வெற்றி எங்கள் பக்கமே. இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறாரே?

இது ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு அழகல்ல. ஆட்சியில் இருக்கும் நாங்கள், புள்ளிவிவரங்களைச் சேகரித்து, ஆய்வு செய்கின்றபோது, இதை அறிந்து உடனே அறிக்கை விடுவது ஸ்டாலினின் வாடிக்கை. இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து நாங்கள் அறிவிப்பாக வெளியிடும்போது, இதை நான் சொல்லித்தான் அரசு செய்கிறது என்று அறிக்கை விடுகிறார் ஸ்டாலின். இதை வேடிக்கையாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

‘நீட்’ தேர்வுக்குப் பதில் ‘சீட்’ என்ற புதிய தேர்வைக் கொண்டுவரப்போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து…

மாநில நுழைவுத் தேர்வுகள் தமிழகத்தில் என்றோ ஒழிக்கப்பட்டுவிட்டன என்பது அவருக்குத் தெரியாதா? யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் வாசிக்கிறார்.

உங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி எதுவுமே இல்லை. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுக்கு முன் வெளிநாடு போய்த் திரும்பிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்துக்கு எந்தத் தொழிற்சாலைகளையும் கொண்டுவரவில்லை என்கிறாரே ஸ்டாலின்?

கரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்தது தமிழகம் என்பதை எல்லோரும் அறிவார்கள். எனது வெளிநாட்டுப் பயணத் திட்டம் வாயிலாக, 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8,835 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. நான் புதிய தொழிற்சாலைகள் தொடங்க நேரில் செல்வதையும், புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதையும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி முன்னிலையில்தான் செய்துவருகிறேன். இது தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். எங்கள் ஆட்சியின் மீது ஏதாவது குறை கூற வேண்டும். அதையே அவர் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்.

அதிமுக எம்எல்ஏவாக ஒருவர் வெற்றிபெற்றாலும் அவர் பாஜக எம்எல்ஏ மாதிரிதான்; பாஜகவை உள்ளே விட்டுவிடக் கூடாது என்கிறரீதியில் ஸ்டாலினும் திமுக கூட்டணித் தலைவர்களும் பிரச்சாரத்தில் அழுத்தமாகப் பேசிவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் இது. எப்போதுமே அதிமுக அரசு, உரிமைகளை விட்டுக்கொடுக்கும் விதமாகத் தனது எம்எல்ஏக்களைப் பழக்கியதில்லை. சிறுபான்மையினரின் நலன்களிலும் சரி; அவர்களின் பாதுகாப்பிலும் சரி; எம்ஜிஆர், அம்மாவின் வழியில் நாங்களும் கண்ணியத்துடன் கவனமாகக் கடமையாற்றிவருகிறோம். பெரும்பான்மைச் சமூகமான இந்துக்களின் கோயில்கள், கடவுள்கள், கலாச்சாரம், பழக்கவழக்கங்களை ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகளும் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள தலைவர்களும் வெகுகாலமாகவே வெளிப்படையாக விமர்சித்துவந்திருக்கின்றனர். இந்துக்கள் மத்தியில் இதைக் கொண்டுசென்று கவனம் பெறவைத்த வகையில் பாஜக இவர்களின் முகமூடிகளைத் தோலுரிக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று நாங்கள் சொல்வதை மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதைப் பொறுக்க முடியாமல் திசைதிருப்பும் விதமாகவே இப்படி ஒரு பிரச்சாரத்தை ஸ்டாலினும் அவருடைய கூட்டணித் தலைவர்களும் கையாள்கிறார்கள். மக்களை நம்பவைக்க வேறு வழியில்லாமல் ஆங்காங்கே வேலுடன் காட்சிதருகிறார்கள். ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

உங்களுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவருடைய விமர்சனங்களில் உண்மையைவிட, எதையாவது செய்து பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற வெறியே அதிகம் இருக்கிறது. அதை நான் உணர்ந்திருப்பதால் அவருடைய வார்த்தைகள் என்னை பாதிப்பதில்லை. உதாரணத்துக்கு இதைப் பாருங்கள். எந்த விதமான அரசியல் குடும்பப் பின்னணியும் இல்லாமல் படிப்படியாக அரசியலுக்கு வந்து என்னுடைய உழைப்பாலும் கட்சியின் மேல் கொண்ட விசுவாசத்தாலும் இந்த இடம் வரை வந்திருக்கிறேன். அந்த வகையில் நான் எங்கள் கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருக்குமே நம்பிக்கை தரும் உதாரணமாக இருக்கிறேன். ஆனால் இதைத் துளிக்கூட பொறுக்க முடியாத ஸ்டாலின் நான் ஏதோ குறுக்குவழியில் இந்த பதவியைப் பிடித்துவிட்டதாக மோசமான வார்த்தைகளில் விமர்சித்துவருகிறார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் இன்று இந்த அளவுக்கு வர முடிந்திருக்கிறது என்றால், அதற்கு என் உழைப்பும் விசுவாசமும் மட்டுமே காரணங்கள் அல்ல. எங்கள் கட்சியின் ஜனநாயகமான கலாச்சாரம்தான் அதற்கு அடிப்படைக் காரணம்.

அதிமுகவில் கடைசித் தொண்டன்கூட தலைவனாக வருவதற்கு வாசல் திறந்திருக்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. அங்கே திமுகவில் நிலைமை என்ன? கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பின் உதயநிதி! தன்னுடைய மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் திட்டம் தன்னிடம் இல்லை என்று ஸ்டாலின் சொன்னதும், தனக்கு அரசியலில் நுழையும் விருப்பம் இல்லை என்பதுபோல அவர் மகன் சொன்னதும் இன்றும்கூட அப்படியே ஊடகங்களில் பதிவாகிக் கிடைக்கிறது. ஆனால் சொன்னதையும் மீறி என்ன செய்தார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்? இதனால், திமுக என்பது வாரிசுக் கட்சி என்பதும், அங்கே வாரிசுகளைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு இல்லை என்பதும் பட்டவர்த்தனமாக மக்களுக்குப் புரிகிறது. இந்தக் காரணங்களால்தான் நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்றும், நான் இன்றும் ஒரு விவசாயி என்றும் என் பரப்புரையில் கூறுவதை ஸ்டாலினால் தாங்க முடிவதில்லை. நிதர்சனம் நேரடியாக உறைப்பதால், கோபம் கொண்டு, ‘நானும் ரவுடிதான்’ என்று நான் கூறுவதாக கேலி செய்து என்னை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். அது என்னைப் புண்படுத்துவதைவிட, விவசாயிகளின் உள்ளத்தைதான் அதிகம் சுடுகிறது என்பது ஸ்டாலினுக்குப் புரிய வாய்ப்பில்லை!

தேர்தல் நேரத்தில் நடந்திருக்கும் வருமானவரிச் சோதனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

வருமானவரிச் சோதனை என்பது அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களின், புகார்களின் அடிப்படையில் நடப்பதாகவே கருதுகிறேன். தேர்தல் நேரத்துத் தகவல்களின் அடிப்படையில் அதிமுகவினரின் வீடுகளிலும்தான் சோதனை நடந்திருக்கிறது. விசாரணையை நியாயமான முறையில் எதிர்கொள்ள அவர்கள் தயாராகிவருகிறார்கள். வழக்கம்போல் இதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடப்பார்க்கிறார் ஸ்டாலின். அவருடைய கட்சிக்காரர்கள், குடும்பத்தினர் தவறு செய்யவில்லை என்றால், ஏன் அவர் பதறுகிறார்? மடியில் கனமில்லை; வழியில் பயம் இல்லை என்று அவர் சொல்வது உண்மையானால், எங்களைப் போல அவரும் இந்த சோதனைகளைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டியதுதானே?

இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளால் வெற்றிவாய்ப்பு அதிகரித்திருக்கிறதா? பிரச்சாரத்துக்கு பாஜக தலைவர்கள் வருவது பற்றி வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி விவாதித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன்தான் கூட்டணி அமைத்துள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்குப் பிரதமரும், பாஜகவின் தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் கூட்டணி வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் அடைந்திருக்கும் பலன்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதிமுக அரசின் சாதனைகளை எங்களோடு சேர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ்; அவர் மகன் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் வெற்றிக்காக ஆத்மார்த்தமாக உழைக்கிறது. இதனால் மிரண்டு போயிருக்கும் ஸ்டாலினும் திமுக கூட்டணித் தலைவர்களும் தோல்வி பயத்தில், பைசா காசுக்குப் பிரயோஜனம் இல்லாத விமர்சனங்களைப் பரப்பிப் பார்க்கிறார்கள். ஆனால், அது எடுபடாது.

மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். மகத்தான வெற்றி பெறுவோம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே