யூனிபார்ம்தான் வேற, ஐபிஎல்-னு நினைச்சு சுதந்திரமாக விளையாடு: சூரியகுமார் யாதவிடம் விராட் கோலி கூறியது

ஹர்திக் பாண்டியா தனக்கு அளித்த புதிய பொறுப்பில் இங்கிலாந்தின் அதிரடி வரிசைக்கு எதிராக, 4 ஓவர் 16 ரன்கள் 2 விக்கெட் என்று சிக்கனம் காட்டி அசத்தினார். ராகுல் சாஹர் 2 விக்கெட், தாக்கூர் 3 விக்கெட்.

அகமதாபாத் டி20 போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்கள் படையில் புதிய ஒருவராக சூரியகுமார் யாதவ் இணைந்துள்ளார், 2வது போட்டியில் இஷான் கிஷன் ஒரு புதிய வெளிப்பாடு என்றால் நேற்று சூரியகுமார் யாதவ் இன்னொரு வெளிப்பாடு. இந்திய கிரிக்கெட் மேன் மேலும் வலுவடைந்து செல்வது அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

31 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார் யாதவுக்கு வயது 30, இனி டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அவருக்கு வாய்ப்புகள் அதிகம். அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதல் பந்திலேயே பிரையன் லாரா பாணி ‘நடராஜா ஷாட்டில்’ சிக்ஸ் அடித்து அசத்தி பிறகு ஆட்டநாயகன் விருது வரை சென்றார் என்றால் அவரது திறமை சாதாரணப்பட்டதல்ல.

கோலி, ரவிசாஸ்திரி ஆகியோரும் சூரியகுமார் யாதவ்வை உற்சாகப்படுத்தினர், இறங்கும் முன் ஒரு சிறு அறிவுரை, ஆலோசனை வழங்குவது எல்லா கிரிக்கெட்டிலும் வழக்கம். அப்படி சூரிய குமார் யாதவுக்கும் கோலி ஒரு ‘பெப் டாக்’ கொடுத்தார். அதை சூரியகுமார் யாதவ் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி ரோகித், ராகுல், கோலியை சொற்ப ரன்களில் இழக்க சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த் (30), ஷ்ரேயஸ் அய்யர் (37), ஆகியோர் பங்களிக்க ஹர்திக் பாண்டியா, ஷர்துல் சிறிய பங்களிப்பை நிகழ்த்த இந்திய அணி கடைசி 12 ஓவர்களில் 115 ரன்களை விளாசி 185 ரன்களுக்கு வந்தது. ஆர்ச்சரை ஒன்றும் செய்ய முடியாது, அவர் 4 விக்கெட். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி பலமாக விரட்டியது 177 ரன்கள் வரை வந்தது. மொத்தத்தில் ஹர்திக் பாண்டியா தனக்கு அளித்த புதிய பொறுப்பில் இங்கிலாந்தின் அதிரடி வரிசைக்கு எதிராக, 4 ஓவர் 16 ரன்கள் 2 விக்கெட் என்று சிக்கனம் காட்டி அசத்தினார். ராகுல் சாஹர் 2 விக்கெட், தாக்கூர் 3 விக்கெட்.

இந்நிலையில் ஆட்ட நாயகன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது:

எல்லாம் நல்லபடியாகச் சென்றதில் மகிழ்ச்சி. இந்தியாவுக்கு ஆடி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது என் கனவு. என்னுள் நானாகவே இருக்க விரும்பினேன். என்னுடன் நானே பேசிக்கொண்டிருந்தேன். எளிதாக அனைத்தையும் வைத்து கொள்ள முடிவெடுத்தேன்.

அணி பயிற்சியாளர்களும், விராட் கோலியும் என்னிடம் போய் தைரியமாக, சுதந்திரமாக ஆடு என்றனர். ஐபிஎல் என்று நினைத்து ஆடு, யூனிபார்ம் நிறம்தான் வேறு, என்று உற்சாகப்படுத்தி உத்வேகமளித்தார்கள்.

இவ்வாறு கூறினார் சூரியகுமார் யாதவ். இவரது முதிர்ச்சியான ஆட்டம் அதே வேளையில் உறுதியான ஷாட் தேர்வு ஆகியவற்றினால் உலகக்கோப்பை டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு நிச்சயம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே