கொரோனா தொற்று அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ள மாநிலங்கள் எவை?

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் வெகமெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 871 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 102 நாட்களில் அதிகபட்ச பாதிப்பாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 23 ஆயிரத்து 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 84 பேர் பலியாகியுள்ளனர். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாக்பூர், புனே, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல்கார் மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் அங்கு புறநகர் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிவில் லைன்ஸ் பகுதியில், கண்காணிப்பு பணியை மேற்கொண்ட போலீசார், முகக்கவசம் அணியாதவர்களுக்கு, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 30ம் தேதி வரையும், காஜியாபாத்தில் மே 10ம் தேதி வரையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்குள்ள 3 கொரோனா கண்காணிப்பு மையங்களை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 6.5 சதவீதம் கொரோனா தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை டோஸ் மருந்துகள் வீணாகி உள்ளது என்ற புள்ளி விவரத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தடுப்பூசி நிரப்பப்பட்டுள்ள ஒரு குப்பியை திறந்தால், நான்கு மணி நேரத்துக்குள் அதில் உள்ள மருந்தை பயன்படுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே