தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி  வென்றது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா இரட்டை சதமும், ரஹானே சதமும் அடித்து அசத்தினர். 

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணி பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்திருந்தது. 2வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டி காக் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

அவருடன் ஆட வந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

அவரை தொடர்ந்து வந்த ஹம்ஷா, டூப்பிலசீஸ் ,புவாமா ஆகியோர் ஷமி வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர்.

அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட க்லாசன் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். 

அவரை தொடர்ந்து களம் இறங்கிய லிண்டே மற்றும் பைஎட் ஆகியோர் இரட்டை இலக்கு ரன்களை எட்டிய போது லிண்டே 27 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வரும் ப்ரூயின் 30 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த வீரர்களும் சொர்ப்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 இந்திய அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை  இந்திய அணி தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 

4 இன்னிங்சில் 529 ரன்களை எடுத்த ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே