சூரியகுமார் யாதவ் அவுட்டா? நாட் அவுட்டா?- அம்பயரிங் குறித்து சேவாக், முன்னாள் வீரர்கள் விளாசல்

சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் மலான் கேட்சையும் சிறுவன் ஒருவன் கண்களைக் கட்டிக்கொண்ட படத்தை வெளியிட்டு ’அவுட் கொடுக்கும் போது 3ம் நடுவர்’ என்று கேலி செய்துள்ளார்.

அகமதாபாத் 4வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு கடைசி ஓவரில் த்ரில் வெற்றி கிடைத்து தொடர் சமன் ஆனது ஒருபுறம் இருந்தாலும் முதன் முதலில் பேட்டிங் வாய்ப்பு கிடைத்த சூரிய குமார் யாதவ் 31 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 57 ரன்கள் அடித்தது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆனது.

ஆனால் அவர் கரன் பந்தில் மலான் கேட்சுக்கு அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது, குறிப்பாக கிரவுண்டில் பட்டு கேட்ச் ஆனதா என்ற சந்தேகத்தில் மூன்றாவது நடுவரிடம் செல்லும் போது களநடுவர் ‘சாஃப்ட் சிக்னலாக’ அவுட் கொடுப்பது சரியா என்ற சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக விரேந்திர சேவாக் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நடுவர்களை கடுமையாக விமர்சித்தனர்.

இன்னிங்சின் 14வது ஓவரில் கரன் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார் சூரியா ஆனால் பந்து சரியாக சிக்கவில்லை மலான் அதைக் கேட்ச் பிடித்தார், ஆனால் உண்மையில் அவர் பிடிக்கவில்லை, கடைசியில் கை தரையில் பந்துக்குக் கீழ் வரவில்லை எனவே இது நாட் அவுட்தான் தரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடுவர் அவுட் கொடுத்து விட்டார். மேலும் ரீப்ளேயில் எதுவும் முடிவாகத் தெரியவில்லை எனும்போது சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மனுக்குத்தானே வழங்க வேண்டும் இதுதானே கிரிக்கெட் மரபு.

ஆனால் களநடுவர் சாஃப்ட் சிக்னல் அவுட் என்று கூறியதால் கேட்ச் இல்லாதது எப்படி கேட்ச் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பந்தை தரையில் வைத்து மலான் அழுத்துவது போல் தெரிந்ததை எப்படி அவுட் கொடுக்கலாம்?

இதனையடுத்து சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் மலான் கேட்சையும் சிறுவன் ஒருவன் கண்களைக் கட்டிக்கொண்ட படத்தை வெளியிட்டு ’அவுட் கொடுக்கும் போது 3ம் நடுவர்’ என்று கேலி செய்துள்ளார்.

ரன்வீர் சிங்கும், ஏய் கேட்ச் தரையில் பட்டு எடுக்கப்பட்டது, என்ன இது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வாசிம் ஜாஃபர், “வயலெட்டுகளும் நீலம், வானும் அப்படித்தான், ஏன் சாஃப்ட் சிக்னல் ஐசிசி ஏன்? என்று கேட்டுள்ளார்.

விவிஎஸ் லஷ்மண், ஸ்டூவர்ட் பிராட் போன்றோரும் இந்த சாஃப்ட் சிக்னலை பிடித்து கிழித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பவுலர் டேனிஷ் கனேரியா தன் டிவீட்டில் ஹார்ட் லக் சூரியா, மோசமான தீர்ப்பு என்று சாடியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே