விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு!

சந்திரயான்-2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் II விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி இஸ்ரோ அனுப்பியது. இதில் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.

திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. அதேபோல் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது.

விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் சமிக்ஞை 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் அதனைக் கண்டுபிடிக்க சந்திராயன் 2 மூலம் கடும் முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டது . அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் விக்ரமை தேடும் பணியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கிய இடத்தில் காணப்பட்ட சிதறல்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பள்ளங்களை எஸ் என்ற குறியீட்டுடன் சண்முக சுப்பிரமணியன் என்பவர் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. உளவு கேமரா பிரிவில் பணியாற்றும் அவரைப் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 750 மீட்டர் தூரம் வரையிலும் இதன் சிதறல்கள் விழுந்து கிடப்பதையும் அவர் கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதையடுத்து விக்ரம் லேண்டரின் சிதறல்களை புகைப்படம் எடுத்துள்ள நாசா தற்போது அதனை வெளியிட்டுள்ளது. இதில் பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடப்பதையும், நீல நிறப் புள்ளிகள் விழுந்த போது மண்ணில் உண்டான பள்ளங்களைக் குறிப்பதாகவும் நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே