JUST IN : விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47

புவி மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவ வல்ல கார்டோசாட்-3 செயற்கைக் கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி47 ராக்கெட் காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

புவி ஆய்வுகளுக்காகவும் பாதிகாப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் கார்டோசாட் செயற்கை கோள்களை இந்தியா 2005ஆம் ஆண்டு முதல் விண்ணுக்கு அனுப்பிவருகிறது.

முழுக்க உள்நாட்டில் தயாராகும் இந்த செயற்கைக் கோள்கள் இதுவரை 8 அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 9.28 மணிக்கு 9ஆவது செயற்கைகோளாக கார்ட்டோசாட் 3 எனப்படும் தொலை உணர்வு செயற்கைகோள் அனுப்பப்பட்டது.

இந்த செயற்கைகோளுடன் அமெரிக்காவின் வர்த்தகரீதியான 13 நானோ செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் காட்டோசாட் -3 உட்பட 14 செயற்கை கோள்களும் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

1625 கிலோ எடையுள்ள கார்ட்டோசாட் செயற்கைகோள் புவி வட்ட பாதையிலிருந்து 509 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்து புவியின் புகைப்படங்களை அனுப்பும்.

மேககூட்டங்களுக்கு இடையேயும், இரவிலும்கூட துல்லியமான படங்களை இந்த செயற்கைகோள் அனுப்பும். இதனால் புவி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் வரை இந்த செயற்கைகோள் பயன்பாட்டில் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே