“ராணுவ வீரர்களை இழந்த இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” …!!!அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட்…!!!

கிழக்கு லடாக்கில் சீனப்படைகளுடனான மோதலின் போது வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய – சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால் சீன தரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எந்த விபரமும் சீனா வெளியிடாமல் இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து இந்திய வீரர்களின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் எல்லையில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது:-

“அண்மையில் சீனாவுடனான மோதலின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை என்றும் நினைவில் கொள்வோம் என அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய- சீன மோதலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளதாகவும் அமெரிக்க அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே