காஜல் அகர்வாலின் 35 வது பிறந்த நாள் கொண்டாட்டம்…!! குவியும் ரசிகர்களின் வாழ்த்து மழைகள்…!!!

இந்திய சினிமாவில் பிசி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
இந்திய திரைப்படத் துறையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான “கியூன்!! ஹோ கயா நா” என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கில்‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பரத் நடித்த பழனி என்ற படத்தின் மூலம் தமிழிலும் கால் பதித்த இவர், பொம்மலாட்டம், மோதி விளையாடு ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டில் வளர்ச்சியடைந்தார்.
காஜல் அகர்வாலின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது மகதீரா திரைப்படமாகும். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் காஜல் இணைந்து நடித்த இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை தொடர்ந்து தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியான இப்படத்தின் மூலம் இவருக்கு கோலிவுட்டில் ரசிகர் பட்டாளம் உருவானது.

மகதீரா திரைப்படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு என பிசியாக நடிக்க தொடங்கிய இவர், தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோமாளி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனது நடிப்பால் பல விருதுகளையும் ரசிகர்களையும் வென்ற நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காஜல் அகர்வால் அடுத்ததாக தெலுங்கில் மொசகல்லூ, ஆச்சார்யா படங்களிலும், இந்தியில் மும்பை சாகா படத்திலும், தமிழில் இந்தியன் 2, ஹே சினாமிகா, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். இதில் மொசகல்லூ படக்குழுவினர், காஜலின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படத்தில் அவரின் தோற்றம் குறித்த புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே